Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் பிஜேபி கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டி: இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பாரி வேந்தர் பேட்டி.

0

 

திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று
நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமையில்,
கட்சியின் தலைவர் டாக்டர்.ரவிபச்சமுத்து முன்னிலையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து அணிகளை சார்ந்த பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தற்கால அரசியல் சூழ்நிலைகள், வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கட்சியின் நிலைபாடு போன்ற முக்கிய கருத்துக்கள் ஆலோசிக்கபட்டன.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனைத்து வகையிலும் உதவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி நிர்வாகிகள் பெருமளவு நிவாரண உதவிகள் வழங்கி பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது,

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த தார் சாலைகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். தமிழக அரசு மைய அரசை நட்போடு அணுகி தேவையான நிதியைப் பெற்று மக்கள் நல பணியாற்ற வேண்டும்.

கச்சத்தீவை உடனடியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று முன்மாதிரி தொகுதியாக பெரம்பலூரை மாற்றிய பாரிவேந்தர் எம்.பிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது,

காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் வராததால் விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

2024 பாராளுமன்ற தேர்தலில் பாரிவேந்தர் மீண்டும் களமிறங்க வேண்டும். அவரது வெற்றிக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டு ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இன்றுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இனி மேலும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டாக்டர் பாரிவேந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

இந்திய ஜனநாயக கட்சி ஒரு தேசிய கட்சி. இக்கட்சி இன்னொரு தேசிய கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது. அந்த கட்சி எது (பா.ஜ.க) என்பது உங்களுக்கே தெரியும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோம். அவர்களும் அந்த மூன்று தொகுதிகளையும் நம் கட்சிக்கு ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளனர்.

எங்களை தங்களது கூட்டணிக்கு வருமாறு அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்பதை நிருபித்துக்காட்டும் விதாமாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பதாக முன்பாக மிகப்பெரிய அளவிலான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

பொதுக்குழு மேடையில் பேசும் போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து எனக்கு விடுப்பு கொடுக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்களை பார்த்து பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.