Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளரின் வெளிநாடுகளில் உள்ள? சொத்துகளை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு .

0

 

திருச்சி புதிய கரூர்பைபாஸ் ரோட்டில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து நடத்தி வந்தனர்.

இவர்கள் குறுகிய காலத்தில் திருச்சியை தலைமை இடமாக கொண்டு, திருச்சி மலைக்கோட்டை, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, கும்பகோணம், நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 9 கிளைகளை தொடங்கி நடத்தி வந்தனர். இந்த நகைக்கடைகளில் நகை வாங்கினால் செய்கூலி, சேதாரம் இல்லை எனவும், பல நகை சிறுசேமிப்பு மற்றும் தங்க முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக துண்டு பிரசுரங்கள் மூலமும், நடிகர், நடிகைகள் மூலமும் பெரிய அளவில் விளம்பரம் செய்தனர். அத்துடன் முதலீட்டு திட்டங்களுக்கு அதிக வட்டி மற்றும் போனஸ் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கும், சீட்டு போட்டவர்களுக்கும் பணத்தை கொடுக்காமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி உள்பட 9 நகைக்கடைகளையும் பூட்டிவிட்டு, அதன் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன், அவருடைய மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் உள்பட நிர்வாகிகள் மீது திருச்சி, சென்னை, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சி, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள அந்த மோசடி நிறுவனத்தில் நகைக்கடைகளில் அதிரடி சோதனை நடந்தி 22 கிலோ வெள்ளி, 1, 900 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 711 ரொக்கம் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி செய்தல் என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நகைக்கடை மேலாளர் நாராயணன் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தலை மறைவாக இருந்த நகைக் கடை உரிமையாளர் மதன், மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் 7-ந் தேதி சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்ற விசானையில் இன்று வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நகைக்கடை உரிமையாளர் மதனின் மனைவி கார்த்திகாவை திருச்சி, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்து, மதுரை முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவரிடமிருந்து ரூ. 52,000 ரொக்கம் மற்றும் 2 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அந்தத் தொகையை திருப்பி வழங்க மோசடி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெரும்பாலான சொத்துக்கள் அடமானத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை மீட்டு பறிமுதல் செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர். அதேபோன்று கடைகளுக்கு அட்வான்ஸ் கொடுத்த தொகை சுமார் ரூ.3 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆகவே அந்த தொகையையும் கைப்பற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ரூ. 100 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் பறிமுதல் செய்ய இருக்கும் சொத்துக்களின் மதிப்பு வெகு குறைவாக உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஆகவே வெளிநாடுகளில் மதன் சொத்துக்களை வாங்கி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.