Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் செல்வ முத்து மாரியம்மன் கோயில், பாலாலயம் செய்யப்பட்ட அம்பாள் சிலை கழிவு நீர் வாய்க்காலில். இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி கடும் கண்டனம்.

0

திருச்சி மாநகராட்சி 35 வது வார்டு (பழைய வார்டு 27) செந்தண்ணீர்புரத்தில் பழமையான செல்வ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 20 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.

இதற்கிடையில் இந்த கோவில் முற்றிலும் சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்க முயற்சியின் காரணமாக இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ள டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
செல்வ முத்து மாரியம்மன் கோவிலை முற்றிலுமாக இடித்துவிட்டு புதிதாக கட்டுமான பணிகள் மேற்கொண்டு தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. கோவில் அம்பாள் சன்னதி மற்றும் ஆர்சிசி சுற்று மண்டபம் கட்டும் பணி ரூ.95 லட்சம் மதிப்பிலும், கோவில் உப சன்னதிகள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும், மின் இணைப்பு பணி மேற்கொள்ளவும் ரூ.17.50 லட்சம் மதிப்பிலும், மடப்பள்ளி, பொருட்கள் வைப்பறை, தரைதளம், மேல் தளம், முடிவாக்கம், சுற்றுச்சுவர்கட்டும் பணிகளுக்கு ரூ.35.75 லட்சம் மதிப்பிடும் பணிகள் மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் டெண்டர் அறிவிப்பு வெளியானது.

இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்பாள் சிலை பாலாலயம் செய்யப்பட்டு கோவில் இருந்த இடத்திற்கு எதிர்ப்புறம் உள்ள சாலையோரத்தில் தகரக்கொட்டை அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள உப சன்னதிகளின் சிலைகளும் கல்லுக்குழி ரயில்வே காலனி பகுதியில் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவில் முற்றிலும் இடிக்கப்பட்டு அஸ்திவாரம், தூண் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பக்தர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமலும், ஆகம விதிகளை மீறி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கூறுகையில்:-

 

இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று எங்களது இயக்கம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் எதிரொலியாகவே தற்போது டெண்டர் விடப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே அம்பாள் சிலை இருந்த இடத்தை மாற்றி வேறு இடத்திற்கு மாற்றும் வகையில் கட்டுமான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த கோவிலில் கருப்புசாமிக்கு காவு கொடுக்கும் நடைமுறை உள்ளது. ஏற்கனவே இந்த கோவிலில் 2003 ஆம் ஆண்டு யாருடைய அனுமதியும் இல்லாமல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டனர். காவு கொடுக்கும் கோவிலில் சிவன் இருக்கக் கூடாது என்பது ஐதீகம். அதனால் இந்த முறையும் சிவன் சிலையை கோவிலில் வைக்க கூடாது என்று பக்தர்கள் கூறுகின்றனர். அம்பாளுக்கு மட்டுமே இக்கோவிலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

அதேபோல் தரமற்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் கட்டுமான பணி டெண்டர் விட்டதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் வரப்பெற்றுள்ளது. மேலும் திருக்கோவில் பணியை கண்காணிக்கும் அறநிலையத்துறையின் பொறியியல் பிரிவு ஊழியரும் (62 வயதிலும் பணியில் உள்ள நபர்) அவருக்கு உடந்தையாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆகையால் இந்து அறநிலையத்துறை ஆணையர் இதில் நேரில் தலையிட்டு தரமான முறையில் கோவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும், ஆகம விதிகளை மீறாமலும், உள்ளூர் பக்தர்களின் ஆலோசனையை மேற்கொண்டு கட்டுமான பணிகளை தொடர வேண்டும்.

அதோடு கோவில் மாதிரி வடிவமைப்பை வெளியிட வேண்டும். கட்டுமான பணி மேற்கொள்ளும் இடத்தில் கோவில் புதிய வரைபடத்தை காட்சிப்படுத்த வேண்டும்.

அதோடு அம்பாள் சிலையை பாலாலயம் செய்து வைக்கப்பட்டுள்ள இடம் கழிவு நீர் கால்வாயாகும். கழிவுநீர் கால்வாய் மேல் புறத்தில் அம்பாள் சிலையை பாலாலயம் செய்து வைத்துள்ளனர். இது முற்றிலும் இந்து மக்களின் மனதை புண்படுத்தக்கூடிய செயலாகும். ஆகவே உடனடியாக அந்த இடத்தை மாற்றி வேறு இடத்தில் வைத்து பூஜைகளை தொடர வேண்டும் என இந்துக் திருகோயில்கள் மீட்புஏக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.