Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத தமிழக அரசை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள். தேவநாதன் யாதவ்

0

சென்னை: கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த பிளக்ஸ் பேனரை அகற்றியதை கண்டித்து யாதவா மகாசபை அமைப்பினரும் இந்து முன்னணியிரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன், தனக்கு சொந்தமான தனியார் கட்டடத்தில், ‘கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் போர்டு வைத்திருந்தார். அந்த போர்டு சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தேவநாதன், கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த நமது யாதவ மகா சபையின் பெயர் பதாகையை இரவோடு இரவாக தலைமை அலுவலகத்திலிருந்து அகற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. அகற்றப்பட்ட பதாகையில் உள்ள அதே வாசகங்களுடன் தமிழகம் முழுவதும் வைக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

ஒவ்வொரு மாவட்ட யாதவ மகா சபை, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர,கிளை அலுவலகங்களிலும் கடவுள் இல்லை என்பவன் முட்டாள், ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற யாதவ மகா சபையின் வாசகம் கொண்ட பெயர் பதாகை வைக்கப்படும். அதிகார பலத்தை கொண்டு மாற்று சிந்தனை கொண்டவரை எல்லாம் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்ற அறிவாலயத்தின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தேவநாதன் அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த போர்டினை அகற்றியதற்கு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், சென்னையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் அவர்களுக்கு சொந்தமான தனியார் கட்டிடத்தில் “கடவுள் இல்லை என்பவன் முட்டாள் , ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி” என வைக்கப்பட்டிருந்த பதாகையை காவல்துறை உதவியுடன் அரசு அதிகாரிகள் அகற்றியிருப்பது அநாகரிகமான செயல் ஆகும்.

தேவநாதன் அவர்கள் வைத்த போர்டினை அகற்றும் காவல்துறை “கடவுளை மற; கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன் , கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி ” என ஈ.வேரா பெயரில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளையும் போர்டுகளையும் அகற்றுவது தானே நியாயமானதாக இருக்கும். அதை செய்யவில்லையே ஏன் ? முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறை திமுகவினரின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்பது வேதனையான உண்மை .

தமிழக அரசின் ஜனநாயக விரோதமான இந்த செயல் கருத்துரிமைக்கு எதிரான திமுகவின் பாசிச போக்கை தெளிவாக காட்டுகிறது. தமிழக அரசின் அடக்குமுறைக்கு சிறிதும் அஞ்சாமல் ஒரு போர்ட்டை அகற்றினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இது போல போர்டு வைப்போம் என எழுச்சியோடு அறிவிப்பு கொடுத்து செயல்படுத்தி வரும் யாதவ மகாபை நிறுவனர் தேவநாதன் அவர்களை இந்துமுன்னணி பாராட்டுகிறது.

மேலும் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் தமிழக அரசின் போக்கை கண்டித்து வரும் திங்கள்கிழமை யாதவ மகாசபை போராட்டம் அறிவித்துள்ளதை இந்துமுன்னணி வரவேற்கிறது. தமிழகம் முழுவதும் இது போல அனைத்து ஆன்மீக அன்பர்களும் கடவுள் மறுப்பிற்கு எதிராக பதாகைகள் போர்டுகள் வைக்க முன்வரவேண்டும் என இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது.

யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் அவர்களுக்கு இந்துமுன்னணி தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும். தமிழக அரசின் ஜனநாயக விரோத போக்கை இந்துமுன்னணி வன்மையாக கண்டிப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் பதாகை அகற்றப்பட்டதை கண்டித்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன்பாக யாதவா மகாசபையில் கைகளில் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து காவல்துறையினரிடம் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள் என்று சொல்ல எங்களுக்கும் உரிமை உள்ளது என்று கூறினர். நேரம் செல்லச் செல்ல பதற்றம் அதிகமாகவே அனைவரையும் கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

இதனையடுத்து கடவுள் இல்லை என்பவன் முட்டாள் ஆன்மிகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகம் அடங்கிய பெயர் பதாகை யாதவ மகா சபையின் தலைமை அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டதை கண்டித்து ஆண்டவனிடம் நீதி கேட்டு மனமுருகி பிரார்த்தனை செய்ய சென்ற யாதவ மகா சபை மாநில,மாவட்ட நிர்வாகிகள், பாஜக தலைவர்கள்,இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சகோதரர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது ஜனநாயக விரோதம் என்று தேவநாதன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத தமிழக அரசை விரைவில் மக்கள் தங்களின் மனதிலிருந்து தூக்கி எறிவர்.

ஜெய்ஹிந்த் என்றும் தேவநாதன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.