திருச்சி முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைத்திட போலீஸ் கமிஷனருக்கு உபயோகிப்பாளர் உரிமை பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் மகேஸ்வரி வையாபுரி கோரிக்கை.
திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (39). இவர் சித்த மருத்துவம் தொடர்பான தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று முதல் நாள் (11ம் தேதி) இரவு ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனத்தை எடுப்பதற்காக நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் வந்துள்ளார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை அடுத்த செந்தண்ணீர்புரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென தண்டபாணிக்கு மயக்கம் வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய தண்டபாணி அருகில் உள்ள செந்தண்ணீர்புரம் பேருந்து நிழற்குடையில் அமர்ந்து உள்ளார். அவரை அழைத்து வந்த நண்பர் அங்கிருந்து சென்று விட்டார். பயணிகள் நிழற்குடையில் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்த தண்டபாணி அதிகாலை 3 மணியளவில் கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது தான் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் என 12 பவுன் நகைகள் மற்றும் செல்போனை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து நண்பர்களை உதவிக்கு அழைத்து பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால் சம்பவம் நடந்த இடம் பாலக்கரை எல்லை என்று கூறி அவர்கள் திருப்பி அனுப்பினர். இதை தொடர்ந்து பாலக்கரை காவல் நிலையத்திற்கு தண்டபாணி சென்ற போது அவர்கள் சம்பவம் நடந்த இடம் பொன்மலை காவல் நிலைய எல்லை தான் என்று அவர்களும் திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்ட தண்டபாணி இறுதியாக பொன்மலை குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செந்தண்ணீர்புரம் பயணிகள் நிழற்குடையின் எதிர்புறத்தில் சுமார் 100 அடி தூரத்தில் காவல்துறையின் சிசிடிவி கேமரா உள்ளது. ஆனால் இந்த கேமரா உடைந்து செயலிழந்து இருப்பது தெரிய வந்தது. அதேபோல் இந்த பகுதியில் உள்ள மூன்று காவல்துறை சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து இருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி இதுபோல் வாகனங்களில் செல்பவர்கள், வாகனங்களை நிறுத்தி விட்டு தூங்குபவர்கள், விபத்தில் சிக்கும் வாகனங்கள், பழுது ஏற்பட்டு நிற்கும் வாகனங்கள், சரக்கு லாரிகள் போன்றவற்றில் திருடும் கும்பல் தங்களது கைவரிசையை காட்டி வந்தது. தற்போது மாநகர எல்லைக்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மயங்கிய நிலையில் பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து இருந்த நபர் அணிந்திருந்த நகைகளை மர்மகும்பல் திருடி சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து உபயோகிப்பாளர் உரிமை பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கூறுகையில்:-
திருச்சி மாநகர காவல் துறை சார்பில் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் வேலை செய்யாமல் பழுதடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலையில் பெண்கள் மற்றும் வயதானவர்கள் வாக்கிங் செல்லும் வேலையிலும்
,இதேபோன்று மாலை நேரங்களில் பணி முடிந்து செல்லும் பெண்களிடமும் தான் செயின் பறிப்பு போன்ற அதிக அளவிலான குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.காலை வேளையில் போனமிடம் பெண்களிடம் செயின் பறிப்பு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்காதது இதற்கு காரணம்.
இதனால் பெரும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் எளிதில் தப்பிவிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிப்பவர்களை எளிதில் அடையாளம் கண்டு குற்றவாளிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சியும் வெளியில் தெரியாமல் நடைபெற்று வருகிறது.எனவே ஆங்காங்கு காவல்துறை சார்பில் புகார் பெட்டிகளும் அமைத்திட வேண்டும்.
இந்த நவீன யுகத்தில் காவல்துறையினர் செல்போன், சிசிடிவி கேமரா போன்றவற்றின் மூலம் தான் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடிகிறது. இதுபோன்ற சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்க செய்வதிலும், உடைப்பதிலும் சமூக விரோதிகளின் பங்கு இருக்கிறதா என்பதையும் காவல்துறையினர் ஆராய வேண்டும்.
ஆகையால் திருச்சி மாநகரில் செயல் இழந்து காணப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை செயல்பட செய்ய மாநகர காவல் ஆணையர் காமினி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.