Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நாளை 19வது பட்டமளிப்பு விழா.இயக்குனர் அகிலா அறிவிப்பு.

0

 

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (என்ஐடி) 19வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் அகிலா கூறுகையில், ”அகில இந்திய அளவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் நடக்கும் 19வது பட்டமளிப்பு விழாவில் இளநிலை, முதுநிலை கட்டடக்கலை, ஆராய்ச்சிதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2155 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இது அதிகமாகும்.

இவற்றில் 1090 மாணவர்கள் தொழில்நுட்பத்திலும், 44 மாணவர்கள் கட்டடக்கலையிலும் இளங்கலைப் பட்டம் பெறுகின்றனர். மேலும் முதுகலை மாணவர்களில் 538 பேர் தொழில் நுட்பத்திலும், 22 பேர் கட்டடக்கலையிலும், 89 பேர் அறிவியலிலும், 108 பேர் கணிப்பொறி பயன்பாடுகளிலும், 19 பேர் கலையிலும், 92 பேர் வணிக மேலாண்மையிலும், 19 பேர் அறிவியல் ஆய்விலும் பட்டம் பெறுகின்றனர்.

இன்னும் 142 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர்.

முதன்மை மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் ஜனாதிபதியின் சிறப்புப் பதக்கத்தை மின் பொறியியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சௌந்தர்யா என்ற மாணவி பெறுகிறார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, திருச்சி என்ஐடி தேசியப் பயிலகத் தரவரிசைக் கட்டமைப்பின் (என்ஐஆர்எப்) பட்டியலில் நாட்டின் முதன்மை தேசிய தொழில்நுட்பக் கழகமாக இடம் பெற்றிருக்கிறது. தேசிய அளவில் 2023ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் பொறியியலில் ஒன்பதாவது இடத்தையும், கட்டடக்கலையில் நான்காவது இடத்தையும், மேலாண்மையில் 35வது இடத்தையும் பெற்றுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தில் உயர் கல்வியின் சிறப்பு என்ற மாநாட்டில்,திருச்சி என்ஐடி தேசிய அளவில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்றமைக்காக கௌரவித்தார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது நடைபெற்று வரும் வைர விழா ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை 2020க்குத் தகுந்தவாறு, மாணவர்களின் பல்துறை விருப்பங்களுக்கேற்ற தகவமைப்புப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், தொழில் நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை ஊக்குவித்தல், உயர் கல்விப் பயிலகங்களினிடையே கல்விசார் மதிப்பீடுகளின் பரிமாற்றம் ஆகியவை செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.