திருச்சி மாநகராட்சியின் 5 மண்டல குழு அலுவலகங்களுக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் பணிகளுக்கான டெண்டா் விரைவில் முடிவு செய்யப்படவுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதி பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளுக்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் பொது பிரச்னைகளுக்காக கோரிக்கை மனுக்கள் அளிக்க வேண்டுமென்றால், மாநகராட்சி மைய அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது.
இதுதவிர, தங்கள் பகுதியின் மாமன்ற உறுப்பினரை சந்தித்து விவரம் தெரிவிக்க வேண்டுமென்றால், அவா்களது வீடுகளிலோ அல்லது அவா்கள் சொந்த செலவில் அமைத்துள்ள அலுவலகங்களிலோதான் பாா்க்க வேண்டும். ஆனால், பணி நிமித்தம் காரணமாக மாமன்ற உறுப்பினரை பெரும்பாலும் ஒரே இடத்தில் பாா்க்க முடிவதில்லை.
இவற்றுக்கு தீா்வு காணும் வகையில், மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் மாநகராட்சி பணிகள் சாா்ந்த பணியாளா்கள் மற்றும் அலுவலா்களை ஒரே இடத்தில் மக்கள் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து தீா்வு காணும் வகையில் 65 வாா்டுகளிலும் மாமன்ற உறுப்பினா்களுக்கான அலுவலகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியில் 65 வாா்டுகளில், தலா 800 சதுர அடி பரப்பளவில் பொது நிதியிருந்து தலா ரூ. 25 லட்சம் செலவில், 65 வாா்டுகளுக்கும் சோத்து மொத்தம் ரூ. 16.25 கோடியில் அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.
இங்கு பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா்களை சந்தித்து குறைகள், தேவைகளை தெரிவித்து மனு அளிக்கும் வகையில் பிரத்யேகமாக அறைகளும் அமைக்கப்படும்.
மேலும், அதே அலுவலக வளாகத்தில் சுகாதார ஆய்வாளா், துப்புரவு பணி மேற்பாா்வையாளா், வருவாய் உதவியாளா் ஆகியோருக்கான அறைகளும் அமைக்கப்படவுள்ளது. அந்தந்த வாா்டுகளுக்குரிய வரிவசூல் மையமும், துப்புரவுப் பணிகளுக்கான தளவாடப் பொருள்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறைகளும் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி பொறியாளா்கள் கூறியது: மாமன்ற உறுப்பினா்களுக்கான அலுவலகங்கள் அமைப்பதற்கான இடங்களை கண்டறியும் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்த நிலையில், எஞ்சிய பணிகளும் விரைவில் முடியும். ஒரே வடிவில் அமைக்கப்படும் கட்டட வடிவமைப்பும், திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கட்டடங்கள் குறித்த மாதிரி வரைபடங்களும் தயாா் செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக பணிகளுக்கான ஒப்பந்தம் கோரும் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது. டெண்டா் இறுதி செய்யப்பட்டதும், கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டு மாமன்ற உறுப்பினா் அலுவலகம் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.