Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நியோ மேக்ஸ்: ரூ.5000 கோடி மோசடி.புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் கிடைக்காது, பங்குதாரர்கள் மிரட்டல்.

0

 

விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய சங்கரேஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

இதன் பேரில் நிறுவன இயக்குநர்கள் மதுரை அரசரடியைச் சேர்ந்த எஸ்.கமலக்கண்ணன் (வயது 55), பொன்மேனியைச் சேர்ந்த பால சுப்பிரமணியன் (54), திருச்சி மொராய்சிட்டியில் வசித்து வரும் ஆப்பிள் மில்லட் ஹோட்டல் உரிமையாளர் டி.வீரசக்தி (49) மற்றும் முகவர்கள் விருதுநகர் சூலைக்கரை வி.தியாகராஜன் (51), நெல்லை பாளையம்கோட்டை பி.பழனிசாமி (50), கோவிப்பட்டி கே.நாராயணசாமி (63), அருப்புக்கோட்டை எஸ். மணிவன்னன் (55), சிவகங்கை குமாரபட்டி அசோக் மேத்தா பஞ்சய் (43), தேவகோட்டை ராம்நகர் எம்.சார்லஸ் (50), தூத்துக்குடி லெட்சுமிபுரம் செல்லம்மாள் (80) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

நெல்லை, திருச்சி, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என பல ஊர்களில் உள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள், முகவர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இவர்கள் 10 பேரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.எம். அன்புநிதி ‘மனுதாரர்கள் 68 போலி கம்பெனிகள் நடத்தி பணம் வசூலித்துள்ளனர். 10,000 புகார்தாரர்கள் உள்ளனர். ரூ.5000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. 14 இடங்களில் சோதனையிடப்பட்டுள்ளது. 15 புகாரில் ரூ.4.50 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வாதாடினார்.

 

 

அத்துடன் விசாரணை, தொடக்க நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரியுள்ள மனுதாரர்கள் ஜூம் மீட்டிங் நடத்தி யாரும் புகார் அளிக்கக்கூடாது. புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காது என மிரட்டியுள்ளனர். எனவே, மனுதாரர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். யார், யார் பெயரில் சொத்துக்கள் உள்ளன? எங்கெங்கு சொத்துக்கள் உள்ளன?
பினாமிகள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

முன்ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகி விடுவார்கள். இதனால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என்றார்.

இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி , 10 பேரின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நியோ மேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களின் ஒருவரான திருச்சியை சேர்ந்த வீரசக்தி கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டவர்.
இந்த நிலையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தில் பணம் போட்டு ஏமார்ந்தவர்கள் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மதுரையில் இயங்கி வந்த நியோ மேக்ஸ் மற்றும் அதன் நான்கு கிளை நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமார்ந்த பொதுமக்கள்,

மதுரை சங்கரபாண்டியன் நகர், பார்க் டவுன் தபால்தந்தி நகர், விரிவாக்கம் மதுரை-17, என்ற முகவரியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவில் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் புகார் மனு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் பணம் போட்ட மக்கள் உடனடியாக புகார் தெரிவித்தால், தாங்கள் போட்ட பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.