இந்திய ரயில்வே துறை நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ரயில்வே பணிக்காக வரும் புதியவர்களுக்கு, முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் அவர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.
அதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்டல பயிற்சி மையத்தில் ரயில்வேயில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு மொத்தம் 78 நாட்கள் பயிற்சியானது வழங்கப்பட்டு,
அதன்பின் அவர்கள் தேவைப்படும் இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
தற்போது திருச்சி மண்டல பயிற்சி மையத்தில் 400 பேர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 பேருக்கு அம்மை நோய் தாக்கி உள்ளது. அது பயிற்சி மையம் முழுவதும் பரவி தற்போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு தாக்கியுள்ளது. இதுகுறித்த எந்த தகவல்களையும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல், நோய் பாதித்த அவர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் ரயில்வே பயிற்சி முகாமில் உள்ள அதிகாரிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கான வசதிகள் இருக்கும் போது, அவர்களை ஏன் அனுப்பி வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். தற்போது அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு சென்றதால், அந்த மாநிலங்களிலும் அம்மை பரவி மற்றவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.