பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக
முதல்வரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.
வருகிற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளித்தூய்மையை உறுதிசெய்ய வேண்டும். விலையில்லா பொருட்களை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் கட்டாய மொழிப்பாடம் என்ற விதியை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
மேலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் கூறுகையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என்றார்.