திருச்சியில் தனியார் பேருந்துகளால் விபத்துகள் அதிகரிப்பு.வேகக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டி வேகத்தால் தொடரும் விபத்துக்கள்.
திருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் சென்ற KHT என்ற தனியார் பேருந்தில் ஏறி காந்திமார்க்கெட் பகுதியில் இறங்க முயன்றுள்ளார். இதில் எதிர்த்திசை வாகனங்கள் செல்லும் (ஒன் வே) வழியில் ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால் தடுமாறிய பெண் கீழே விழுந்ததில் பேருந்தின் பின்சக்கரங்கள் ஏறியதில் கால்கள் இரண்டும் நசுங்கின. அலறி துடித்த அவரைக் கண்டு அப்பகுதியில் நின்றிருந்த பொது மக்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கினர்.
தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிர்மலாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தலைமை தபால் நிலையத்திலிருந்து போட்டி போட்டு வந்த தனியார் பேருந்துகளில் ஒன்று ஆர் சி மேல்நிலைப் பள்ளி அருகே ரயில்வே ஊழியர் மீது மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
மேலும் திருச்சியில் ஆங்காங்கே சிறு விபத்துக்கள் தினம் தினம் தனியார் பேருந்துகளால் ஏற்பட்டு வருகிறது.உயிரிழப்பு இல்லாமல் சிறு காயங்கள்,சிறிய சேதம் என்பதால் இது வெளியில் தெரிவதில்லை.
எனவே காவல்துறையினரும். சாலை போக்குவரத்து அதிகாரிகளும் உடனடியாக தனியார் பேருந்துகளுக்கு வேக கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறுகின்றனர்.