ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் திருச்சி உப்புபாறை சாலை: காவல்துறையும், மாநகராட்சியும் இணைந்து மீட்க கோரிக்கை
திருச்சி:
ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் திருச்சி உப்புப்பாறை சாலையை காவல்துறையும், மாநகராட்சியும் இணைந்து மீட்டு வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் ஒரு காலத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக உப்புபாறை மற்றும் சென்ட்ரல் டாக்கீஸ் பகுதி விளங்கியது.
இங்கு சமூக விரோத செயல்கள் ஓரளவுக்கு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் இருந்து தொடங்கும் உப்புபாறை சாலை என்கிற பிள்ளை மாநகர் பகுதி அடர்த்தியான பகுதியாகும்.
பெரிய அளவிலான சாலை இருந்தும் ஆக்கிரமிப்பால் சுருங்கி காட்சியளிக்கிறது. கனரக வாகனங்கள் எளிதில் சென்று வரக்கூடிய இந்த சாலை சிறிய ரக வாகனங்கள் சென்று வரவே தற்போது திணறும் சூழல் உள்ளது.
குறிப்பாக சென்ட்ரல் டாக்கீஸ் எதிர்ப்புறம் பகுதி சுமார் 15 அடி வரை சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது மாட்டு இறைச்சி கடை, பன்றி இறைச்சி கடை, பழைய பொருட்கள் வாங்கும் காயலான் கடை ஆகியவை அமைந்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மாடுகளை கட்டி வைத்தும், கழிப்பிடங்களை அமைத்தும், காயலான் கடை பொருட்களை குப்பை போல் குவித்தும் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த பகுதியில் உள்ள ஒரு பெரிய மொத்த மளிகை பொருள் குடோனுக்கு கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து சரக்குகளை ஏற்றி இறக்கி செல்கிறது.
குறிப்பாக இந்த இந்த கடை குடோனுக்கு வரும் கனரக வாகனங்களில் இருந்து சரக்குகள் சிறிய ரக வாகனங்களுக்கு உடனுக்குடன் மாற்றப்படுகிறது. இதனால் இந்த சாலையில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு சரக்குகள் ஏற்றி இறக்கப்படுகிறது. இது போன்ற காரணத்தால் உப்பு பாறை சாலை முற்றிலும் முடங்கி விடுகிறது.
அதோடு இந்த சாலையில் லாரி ஷெட்டுகள், தோல் கடை, அதிக அளவில் இருப்பதாலும், லாரி, வேன் சரக்கு வாகனங்கள் அடிக்கடி வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகனம் உள்ளிட்ட கார் ஆட்டோ போன்ற வாகனங்கள் எளிதில் இந்த சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் உப்புபாறை சாலை காந்தி மார்க்கெட்டில் இருந்து தொடங்கும் போது வலது புறத்தில் சிறிய அளவிலான கடைகள் உள்ளது. இந்த சிறிய கடைகள் குடோன்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வாசல்களில் குப்பைகளை கொட்டி சிறுநீர் கழிக்கும் இடமாக மாறிவிட்டது.
இதன் அருகே மாரியம்மன் திரு உருவம் வரையப்பட்டு பூஜைகளும் அவ்வப்போது செய்யப்படுகிறது. சிறுநீர் கழிப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இது போன்ற காரணங்களாலும், போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் பொதுமக்கள் இந்த சாலையில் வாகனங்களில் செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.
திருச்சி மாநகரில் வியாபாரிகளின் பிடியில் இருந்த சப் ஜெயில் ரோடு, காந்தி மார்க்கெட் வளைவு உள்ளே பழக்கடை சாலை ஆகியவை வியாபாரிகளின் பிடியில் சிக்கி இருந்தது.
இந்த வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக இருந்த கருணாசாகர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இணைந்து இந்த இரு சாலைகளையும் மீட்டு போக்குவரத்துக்கு திறந்து விட்டனர்.
குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சப் ஜெயில் சாலை வழியாக செல்கிறது.
இதை போல் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து காந்தி மார்க்கெட் வழியாக திருவெறும்பூர் நோக்கி செல்லும் வாகனங்கள் காந்தி மார்க்கெட் வளைவு பழக்கடை சாலை வழியாக மீன் மார்க்கெட் சென்றடைந்து தஞ்சை சாலையில் செல்கிறது.
வியாபாரிகளின் பிடியில் இருந்த இந்த இரு சாலைகளையும் காவல்துறையினர் மீட்டதோடு அதை போக்குவரத்து பயன்பாட்டுக்கும் கொண்டு வந்தது மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது.
அதேபோல் திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் மண்டலம், 30வது வார்டுக்கு உட்பட்ட உப்புபாறை சாலையையும் காவல்துறையினரும், மாநகராட்சியும் இணைந்து மீட்டு போக்குவரத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் அந்த சாலையில் உள்ள மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் ஏழை எளிய மக்கள் செய்வதறியாத தவித்து வருகின்றனர்.
அதேபோல் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் காயலான் கடையில் மலை போல் பொருட்களை குவித்து வைத்திருப்பதால் அதில் மழை நீர் தேங்கி டெங்கு உள்ளிட்ட கொசுக்களை பரப்பி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டை கலைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.