Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காவல் நிலையம் புகுந்து தாக்கியநேருவின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது. 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்.

0

 

திருச்சியில் காவல் நிலையத்தில் நுழைந்து தாக்குதல்:

கைதான திமுகவினர் 5 பேர்
மத்திய சிறையில் அடைப்பு

4 பேரை கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் உத்தரவு.

திருச்சியில் காவல் நிலையத்தில் புகுந்து ரகளை மற்றும் தாக்குதல் நடத்திய திமுகவினர் 5 பேர் மீது 9 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அவர்கள் நேற்று இரவு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திமுக மாநிலங்களவை குழு உறுப்பினராக பதவி வகிப்பவர் திருச்சி என். சிவா. அவரது வீடு, திருச்சி, கண்டோன்மெண்ட் ஐயப்பன் கோயில் பின்புறமுள்ள ஸ்டேட் வங்கி காலனியில் உள்ளது. திருச்சி சிவா வீட்டை ஒட்டி உள்ள பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன இறகுபந்து உள் விளையாட்டு அரங்க திறப்பு விழா நேற்று (புதன்கிழமை ) காலை நடந்தது. அமைச்சர் கே.என். நேரு பங்கேற்று விளையாட்டரங்கை திறந்து வைத்தார். அந்த அரங்க திறப்பு விழா தொடர்பான கல்வெட்டில் திருச்சி சிவா எம்.பி.பெயர் இடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. அமைச்சர் கே.என்.நேரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, இதனைக் கண்டித்து அமைச்சரின் காரை, சிவா எம்.பி.யின் ஆதரவாளர்கள் சிலர் மறித்து, அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (புதன்கிழமை) காலை சிவா எம்.பி.யின் வீட்டு வளாகத்தில் நுழைந்த நேருவின் ஆதரவாளர்கள், அவரது வீட்டு முன் நிறுத்தி இருந்த கார், இருசக்கர வாகனம், வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் நாற்காலிகளை அடித்து உடைத்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து சிவா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவா எம்.பி.யின் வீட்டின் முன் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகளைக்கொண்டு அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது சிவா எம்.பி. வீட்டில் இல்லை. அலுவல் காரணமாக வெளியூரிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கருப்புக் கொடி காட்டிய சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துவதற்காக நீதிமன்ற போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அப்போது அங்கு திரண்டு வந்த திமுகவினர் (நேருவின் ஆதரவாளர்கள்) திடீரென்று போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து சிவா எம்.பி. தரப்பினர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். மேலும் போலீஸ் நிலையத்தை சுற்றி இரும்பு தடுப்பு கம்பிகள் போடப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் அங்கு இருந்த திமுகவினர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து செல்ல முயற்சி செய்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், அதையும் மீறி போலீஸாரை தள்ளிவிட்டு காவல் நிலையத்துக்குள் புகுந்து நாற்காலிகளை தூக்கி அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். சிவா எம்.பி. ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற காவல் நிலையப் பகுதியில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுகவினர் காவல் நிலையத்துக்குள் நுழைந்து ரகளை மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் மற்றும், சிவா எம்.பி வீட்டில் தாக்குதல் நடத்தி சம்பவங்கள் குறித்த காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. .

இந்த சம்பவத்தில் பெண் காவலர் சாந்தி மற்றும் சிவாவின் ஆதரவாளர் சண்முகம் ஆகியோர் காயமடைந்தனர். இதில், உள்கட்சி விவகாரம் குறித்து அமைச்சர் நேரு தரப்பினரும், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தரப்பினரும் பரஸ்பர புகார்கள் கொடுத்துள்ள நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் காவல் நிலையத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய நேரு ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் திமுக திருச்சி மாவட்ட துணைச் செயலாளரும் திருச்சி மாநகராட்சி 57 ஆவது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி நிதிக்குழு தலைவருமான தி. முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் மற்றும் அந்தநல்லூர் ஒன்றியத் தலைவருமான எஸ். துரைராஜ், திருச்சி மத்திய மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரும் திருச்சி மாநகராட்சி 60 ஆவது வார்டு கவுன்சிலருமான காஜாமலை விஜய், மாநகராட்சி 55 ஆவது வார்டு கவுன்சிலரும் வட்டச் செயலாளருமான வெ. ராமதாஸ், திருச்சி மாநகர் மாவட்டம் பொன்னகர் வட்டச்செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது அரசுப்பணியாளரை பணி செய்ய விடாமல் தடுப்பது, அரசு சொத்துக்களை சேதப்படுத்துவது, பொது இடங்களில் தேவையற்ற வகையில் கூடுவது, ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட
(இபிகோ 143,147,447,452,294 பி,353,332,427,506}2) 9 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் திருச்சி மாவட்ட 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட திமுகவினர் ஐந்து பேரும் நேற்றிரவு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சியில் உள்கட்சிப் பூசல் விவகாரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்திய 4 பேர் திமுகவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பது :
திமுக திருச்சி மாவட்ட துணைச் செயலாளரும் திருச்சி மாநகராட்சி 57 ஆவது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி நிதிக்குழு தலைவருமான தி. முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் எஸ். துரைராஜ், திருச்சி மத்திய மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரும் திருச்சி மாநகராட்சி 60 ஆவது வார்டு கவுன்சிலருமான காஜாமலை விஜய், மாநகராட்சி 55 ஆவது வார்டு கவுன்சிலரும் வட்டச் செயலாளருமான வெ. ராமதாஸ் ஆகிய 4 பேரையும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் படியாகவும், கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தாற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.