திருச்சியில் இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி மூதாட்டி பலி.
மற்றொரு விபத்தில் லாரி கிளீனர் சாவு.
திருச்சியில் இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி மூதாட்டி பலியானார். மற்றொரு சம்பவத்தில் லாரி கிளீனர் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி கொட்டப்பட்டு ஜே.கே.நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி காமாட்சி (வயது 27). இவர் தனது உறவினர் வள்ளி (வயது 70) என்பவருடன் திருச்சி ஒத்தக்கடையில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தலைமை தபால் நிலையம் காந்தி சிலை அருகே சென்றபோது அடையாளம் தெரியாத பஸ் இவர் மீது மோதியது. இதில் மூதாட்டி வள்ளி படுகாயம் அடைந்தார். உடனே அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர் காமாட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
லாரி கிளீனர்
பரிதாப சாவு
மற்றொரு சம்பவத்தில் லாரி கிளீனர் பரிதாபமாக இறந்தார் இது பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம் மன்னச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் .இவரது மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 25). லாரி கிளீனர். இவர் திருச்சி பழைய பால்பண்ணை அருகில் லாரியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.