ஒரிசா அனல் மின் திட்டத்திற்காக கொதிகலன் பிரிவு மூலக்கூறுகள் திருச்சி பெல் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இதன் முதல் தொகுப்புகள் கனரக வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி), ஒடிஸா மாநிலம், தால்ச்சா் பகுதியில் அனல் மின்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூன்றாவது நிலையாக தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரு மின்னாலைகளை கட்டமைத்து வருகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்துக்கு (பெல்) ஒப்பந்தம் அளித்துள்ளது.
இதன்படி, தால்ச்சா் அனல் மின்திட்டத்துக்கான கொதிகலன்களை பெல் நிறுவனம் உருவாக்கித் தரவுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, இரு அனல் மின்நிலையங்களுக்கான அடித்தளப் பொருள்களை உள்ளடக்கிய கொதிகலன்களுக்கான அடித்தளத்தில் அமைக்க வேண்டிய தளவாட பொருள்கள் அடங்கிய மூலக்கூறுகள் ஆகும்.
சுமாா் 40 டன் எடையுள்ள இந்த மூலக் கூறுகளை கனரக வாகனம் மூலம் ஒடிஸாவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
பாரதமிகு மின் நிறுவன உயா்அழுத்த கொதிகலன் தொழிற்சாலையிலிருந்து இந்த முதல் தொகுப்பை லாரிகள் மூலம் அனுப்பும் நிகழ்வில், வளாக செயலாண்மை இயக்குநா் எஸ்.வி. ஸ்ரீனிவாசன், பொது மேலாளா் (செயல்பாடுகள்) ராமநாதன் ஆகியோா் கொடியசைத்து அனுப்பி வைத்தனா்.
தேசிய அனல் மின் நிறுவனத்தின் ஆய்வு அலுவலக கூடுதல் பொது மேலாளா் கே.ஜே. ராவ், என்டிபிசி அலுவலா்கள், பெல் அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் உடனிருந்தனா்.