Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்று தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்தது இந்திய அணி.

0

 

இந்தியாவில் விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் , இஷான் கிஷன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினார். தொடக்கத்தில் இஷான் கிஷன் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடினார். கில் , திரிபாதி ஆகிய இருவரும் இணைந்து நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். மறுபுறம் கில் அரைசதம் கடந்தார். அதன்பிறகு அதிரடியில் மிரட்டிய அவர் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டு வாண வேடிக்கை காட்டினார். தொடர்ந்து பவுண்டரி , சிக்ஸர் அடித்த கில் சதம் அடித்து அசத்தினார். இது அவரது முதல் சர்வதேச டி20 சதம் ஆகும். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 234 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 63 பந்துகளில் ( 12 பவுண்டரி , 7 சிக்ஸர் ) 126 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 12.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் 35 (25) ரன்கள் எடுத்தார்.

சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகளும், ஷிவம் மாவி, அர்ஷ்திப் சிங் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. மேலும் டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வென்று அசத்தியது.அத்துடன் டி20 கிரிக்கெட் தர வரிசையில் முதல் இடத்தை தக்க வைத்தது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் ஆட்டநாயகனாகவும், ஹார்திக் பாண்டியா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.