திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆபீசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (55). இவரது மனைவி சந்திரா (43). நிலத்தரகர்களான இவர்கள் இருவரும் நேற்று சென்னை பொன்னேரி பகுதியில் நிலம் வாங்குவதற்காக அவர்களது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி அருகே அடையாளம் தெரியாத நபர்கள் காரை வழிமறித்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அவர்கள் இருவரையும் அவர்களது காரிலேயே ஏற்றிக்கொண்ட அந்த நபர்கள், இடம் வாங்குவதற்காக நீங்கள் எடுத்துச் செல்லும் பணத்தை எங்களிடம் கொடுங்கள் என்று மிரட்டியுள்ளனர். ஆனால் தம்பதியினர் தங்களிடம் எந்த பணமும் இல்லை என்று கூறி உள்ளனர். இதையடுத்து அவர்களது மகன் கலைச்செல்வனிடம் பணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து தங்கள் மகன் கலைச்செல்வனிடம் நடந்ததை கூறி பணத்தை ஏற்பாடு செய்யுமாறு தம்பதியினர் அலைபேசி வழியாக கூறியுள்ளனர். பணத்தை மணப்பாறையில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கலைச்செல்வன் கூறியுள்ளார். பின்னர் தாமதிக்காமல் தனது தாய், தந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி தலைமையிலான காவலர்கள் கடத்தல் கும்பலை பிடிக்க ஆண்டவர் கோயில் அருகில் காத்திருந்தனர். பணம் வாங்கி வந்த கடத்தல்காரர்கள் காவலர்களை கண்டதும் வாகனத்தில் இருந்து மாற்றுப் பாதையில் தப்பிச் சென்றனர். போலீஸாரும் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இதையடுத்து, கடத்தல்காரர்கள் நிலத்தரகருக்கு சொந்தமான சொகுசு காரை வையம்பட்டி அருகே நிறுத்திவிட்டு மற்றொரு வாகனத்தில் பழனியப்பன், சந்திரா இருவரையும் ஏற்றிக் கொண்டு தப்பினர்.
அவர்களிடமிருந்த 10 சவரன் நகை, 40 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு காரில் இருந்து திண்டுக்கல் அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். தம்பதியர் இருவரும் நேற்று இரவு மணப்பாறை காவல் நிலையம் வந்தனர். நடந்த விவரங்களை போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே கலைச்செல்வத்திடம் பணம் வாங்குவதற்காக தோகைமலை அருகே காத்திருந்த துவாக்குடியைச் சேர்ந்த காளிதாஸ் (53) என்பவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் தப்பியவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி, ஆறவயல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட காளிதாசிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.