திருச்சி மாநகரின் முதல்
பெண் காவல் ஆணையர் ‘
திருச்சி மாநகர காவல் ஆணையராக எம். சத்திய பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 45 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு பதவு உயர்வுடன் கூடிய பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.யாக) இருந்த சந்தோஷ் குமார் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த ஜி. கார்த்திகேயன் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.) நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக காஞ்சீபுரத்தில் துணைத் தலைவராக பணியாற்றிய எம். சத்திய பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் துறை கடந்த 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த நிலையில் திருச்சி மாநகர காவல்துறையில் முதல் முறையாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்திய பிரியா ஏற்கனவே திருச்சி மாநகர துணை ஆணையராக சிறிது காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார், திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அதிவீரபாண்டியன் சென்னை தாம்பரம் துணை ஆணையராக ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.