அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் நடைபெற்று வரும் அட்லாண்டா ஓபன் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் அட்லாண்டா பையர், ஸ்கொயர் டிரைவ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய அட்லாண்டா அணியில் தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஹீம் கான்வெல், ஸ்டீபன் டைலர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த நிலையில் கான்வெல் 77 பந்துகளில் 17 பவுண்டரி, 22 சிக்ஸர் உட்பட 205 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் டைலர் 53 (18), சமி அஸ்லாம் 53 (29) ஆகியோரும் அபாரமாக விளையாடியதால், அந்த அணி 20 ஓவர்களில் 326/1 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை எந்த சர்வதேச வீரரும் இரட்டை சதம் அடித்தது கிடையாது. 20 ஓவர் போட்டிகளில் சதமடிப்பதே அரிதாக இருக்கும் நிலையில் கான்வெல் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இருப்பினும் அட்லாண்டா ஓபன் ஐசிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட தொடராக இல்லாததால், டி20 போட்டியில் அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனை கிறிஸ் கெய்ல் வசம் உள்ளது. 2013 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கிறிஸ் கெய்ல் ஒரு போட்டியில் 175 ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது.