Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

15வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி:சூப்பர் 4 சுற்றில் இந்தியா-இலங்கை இன்று பலப்பரிட்சை.

0

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,
ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

சூப்பர்4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது. இதில் இந்திய அணி 181 ரன்கள் குவித்த போதிலும் பாகிஸ்தான் ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை அடைந்து விட்டது. இந்த தோல்வியால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்திய அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இனி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

இந்த நிலையில் இந்திய அணி துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

முந்தைய ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பினார். தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் லோகேஷ் ராகுலும் ஓரளவு நன்றாக ஆடினர். ஆனால் மிடில் வரிசை தான் கொஞ்சம் தடுமாறி விட்டது. பவுலிங்கும் சொதப்பியது. யுஸ்வேந்திர சாஹலின் சுழல் ஜாலம் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை. லீக் சுற்றையும் சேர்த்து இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ள அவருக்கு பதிலாக இன்றைய மோதலில் அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கை மீண்டும் களம் இறக்குவது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

லீக் சுற்றில் தட்டுத்தடுமாறிய இலங்கை அணி சூப்பர்4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி திடகாத்திரமான நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஷனகா, குசல் மென்டிஸ், பானுகா ராஜபக்சே, பந்து வீச்சில் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்‌ஷனா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். அதே உத்வேகத்துடன் இந்தியாவுக்கு எதிராகவும் வரிந்து கட்டுவதால் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இங்கு, 2-வது பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறுவதால் திறமையை காட்டிலும் ‘டாஸ்’ தான்முக்கிய பங்கு வகிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.