Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கண்ணதாசனின் புகழுக்கு காதல் பாடல்ளே காரணம்.என்ஆர் ஐஏஎஸ் அகாடமியில் நடந்த பட்டிமன்றத்தில் ஞானசம்பந்தம் தீர்ப்பு.

0

கவிஞர் கண்ணதாசனின் நிலைத்த புகழுக்கு
காதல் பாடல்களே காரணமாக இருக்கின்றன
என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமி பட்டிமன்றத்தில் நடுவர் கு. ஞானசம்பந்தன் தீர்ப்பு .

திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர்., ஐ.ஏ.எஸ். அகெடமி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர.எஸ்., யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி மையத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு என்.ஆர். கல்வி குழுமங்களின் தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.

கவியரசு கண்ணதாசனின் நிலைத்த புகழுக்கு காரணம் அவர் எழுதிய காதல் முத்துக்களா?தத்துவ வித்துக்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
காதல் முத்துக்கள் என்ற தலைப்பில் பேசிய அறிஞர்கள், காதல் வந்தால் தான் தத்துவம் பிறக்கும். காதல் பாடல்களை கொச்சை இல்லாமல், பச்சையாக சொல்லாமல், இலை மறை காயாக நளினமாக சொன்னவர் கண்ணதாசன் மட்டுமே. அவரின் காதல் கவிதைகள் காலத்தால் அழிக்க முடியாதவை. இன்றளவும் அவரது கவிதைகள் இளைய தலைமுறை கவிஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்றனர்.

தத்துவ வித்துக்கள் என்ற தலைப்பில் பேசியவர்கள்,
காதலிக்கும் போது தாகம் வரும்.அதைத் தீர்த்து வைப்பது தத்துவம் மட்டும்தான். தத்துவம் தான் வாழ்க்கை. வாழ்க்கையில் அனைத்திலும் இழப்பை சந்தித்து மனதை சமநிலைக்கு செல்ல கண்ணதாசனின் தத்துவ தரிசனம் தனக்கு கை கொடுத்ததாக கவிஞர் வாலி கூறி இருக்கிறார் எனப் பேசினர்.

இறுதியில நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்திய தமிழ் அறிஞர் கு. ஞானசம்பந்தன் தீர்ப்பளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
எந்த சூழலுக்கு ஏற்பவும் பாடல் பாடும் வல்லமை பெற்றவராக கவிஞர் கண்ணதாசன் திகழ்ந்தார்.
அவரது தத்துவப் பாடல்கள் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பாடல்களுக்கு இடையே வரும் தத்துவங்கள் ஆதிசங்கரர்,
ராமானுஜர் போன்ற முன்னோர்கள் சொன்ன தத்துவங்களின் சாராம்சங்களை எடுத்து தந்திருப்பார். அவருக்கென தத்துவ பகுதி தனியாக கிடையாது.

ஆனால் காதல் பாடல்களை பொருத்தமட்டில் அவரைப் போன்று யாராலும் எழுத முடியாது. இலை மறை காயாக அவர் தந்த காதல் வர்ணனை பாடல்கள் காலத்தால் அழியாதது. ஆகவே கவிஞர் கண்ணதாசனின் நிலைத்த புகழுக்கு காதல் முத்துக்களே என தீர்ப்பு அளிக்கிறேன் என்றார்.

இந்த பட்டிமன்றத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.