திருப்பூர் குள்ளேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 73). இவர் திருப்பூரில் பனியன் எக்ஸ்போர்ட், டையிங் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது பனியன் நிறுவன வளாகத்திலேயே வீடு உள்ளது. இவரது மூன்று மகன்களுக்கும் ஏற்கனவே திருமணமாகி விட துரைசாமி தனது வீட்டில் மனைவி தனலட்சுமியுடன் வசித்து வருகிறார்.
அவரது வீட்டுக்கு எதிரில் துரைசாமியின் பழைய வீடு இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி தனது பழைய வீட்டில் இருந்து 2 சவரன் நகை, ஒன்றரை லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக துரைசாமி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் திருவண்ணாமலையை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ்(வயது 29), அவரது தம்பி சக்தி(24) அவருடன் வேலை செய்த தொழிலாளர்கள் தாமோதரன் (வயது 33), ராதாகிருஷ்ணன் (வயது 53) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் உரிய முறையில் விசாரித்ததில், ‘
துரைசாமியின் பழைய வீட்டில் காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த கட்டிட தொழிலாளிகளான இவர்கள், வீட்டில் ஒரு அறையில் துணி மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை தெரிந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இப்படி பணம் தேவைப்படும் போதெல்லாம், அலிபாபா குகையில் புகுவது போல அவ்வப்போது வந்து சாவகாசமாக கொள்ளையடித்ததில் ரூ. 3 கோடிக்கும் அதிகமாக கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. அது மட்டும் இல்லாமல் கொள்ளையடித்த பணத்தில் கார், புல்லட் பைக் என்று வாகனங்களை வாங்கி திருவண்ணாமலை, திருப்பூரில் ஜாலியாக சுற்றித்திரிந்து வந்துள்ளனர். மேலும் 4 பேரும் ஆளுக்கொரு வீடு வாங்கி திடீர் பணக்காரர்களும் ஆகி விட்டார்களாம்.
இவர்களின் திடீர் ஆடம்பரம் காரணமாக சந்தேகமடைந்த திருவண்ணாமலை மாவட்ட போலீசாரும் இவர்கள் குறித்து விசாரித்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் திருப்பூரில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து இவர்கள் பணியாற்றிய இடங்களில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்ட போது கொள்ளை போன துரைராஜ் வீட்டில் இவர்கள் பணியாற்றியது தெரியவந்தது.
உடனடியாக இவர்களை பிடித்து விசாரித்ததில் இவர்களின் அலிபாபா குகை கதை தெரியவந்து போலீசாரே அதிர்ந்து போயினர். கணக்கில் காட்டப்படாத பணம் என்பதால் எவ்வளவுதான் கொள்ளை போனது என்பது கூட தெரியவில்லையாம். ரூ.3 கோடிக்கும் மேல் கொள்ளை போய் உள்ளதாக கொள்ளையர்கள் ‘வகையாய்’ செலவு செய்து கொண்டு வாழ்ந்திருக்க, பொறி வைத்து தூக்கி இருக்கிறது போலீஸ். 4 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடமிருந்து 4 வீட்டு பத்திரங்கள், 2 கார், 2 பைக் 16 லட்சம் ரொக்கம், 30 சவரன் நகை உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
தொழிலதிபரின் இந்த பணம் குறித்து மேலும் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் விசாரணை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.