Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக விமான நிலையங்கள் ரூ. 7000 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.திருச்சியில் செயல் இயக்குனர் தகவல்.

0

தமிழக விமான நிலையங்கள் ரூ. 7000
கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
ஏ ஏ ஐ தென்மண்டல செயல் இயக்குநர் தகவல்.


தமிழக விமான நிலையங்களை ரூ. 7,000 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என, இந்திய விமான நிலைய ஆணையக்குழும தென்மண்டல செயல் இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தெரிவித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமானநிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய முனைய கட்டுமானப் பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் தெரிவித்தது :


திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுமானப் பணிகள், ரூ. 951 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019 ஆம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கொரோனா, பருவகால மாற்றங்கள் உள்ளிட்டவைகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க முடியவில்லை. இந்நிலையில் 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முழு பணிகளையும் நிறைவு செய்து, முனையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் ரூ.951 கோடி மதிப்பிட்டில் தொடங்கப்பட்டது. ஆனால் கோவிட் பொதுமுடக்கத்துப் பின்னர் ஏற்பட்ட கட்டுமான பொருட்களின் கடுமையான விலையேற்றத்தால் முனைய கட்டுமான மதிப்பீடு ரூ.1,000 கோடியாக உயர வாய்ப்புள்ளது.

திருச்சி விமான நிலையத்தைப் பொறுத்த வரையில் அனைத்துமே தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகள், நகரும் குளிர்சாதனம், கண்காணிப்பு கேமரா, தானியங்கி நகரும் படிக்கட்டுகள், தண்ணீர் பயன்பாடு என அனைத்துமே தானியங்கி (புல்லி ஆட்டோமேடிக்) முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போதுள்ள முனையத்தை விட 1.5 மடங்கு அளவில் பெரியதாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையம் தான் நாட்டிலேயே மிகவும் அழகான விமானநிலையமாக இருக்கும். புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்ததும், பழைய முனையம் கண்காணிப்பு மையம், பயிற்சிகள், மற்றும் இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். தற்போதுள்ள சூழலில் சுமார் 70 சதவிகித பணிகள் முற்றுப்பெற்றுள்ளன. மீதி 30 சதவிகித பணிகள் ஜூன் 2023க்குள் முடிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.7,000 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன. தூத்துக்குடி விமானநிலையத்தில் ஓடுதளம், புதிய முனையம், வான் கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு நிலைய விமான ஓடுதளத்தின் நீளம் 1,350 மீட்டரிலிருந்து 3,115 மீட்டராக உயர்த்தப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்ததும் கோவை, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் பெரியரக விமானங்களை கையாள முடியும். இதேபோல சேலம், வேலூர் விமான நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை விமானநிலைய விரிவாக்கத்துக்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன என்றார்.

திருச்சி விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் கூறுகையில்,

திருச்சி, விமானநிலைய விரிவாக்கத்துக்காக கொட்டப்பட்டு, கிழக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் இதுவரை 40.93 ஏக்கர் நிலம் விமான நிலையத்துக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 40 ஏக்கர் நிலம் ஜூன் மாதத்துக்குள் கையகப் படுத்தப்படும். நீதிமன்ற வழக்குகள் மற்றும் சில தடைகள் உள்ளிட்டவைகளால் இதில் தாமதம் நிலவியது. நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றார். நிகழ்வின்போது, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டுமான பணிகளை நிர்வகித்து வரும் பொதுமேலாளர் ஸ்ரீகிருஷ்ணா, திருச்சி விமான நிலைய துணைப்பொது மேலாளர் சீனிவாசன், இயக்குநரின் நேர்முக உதவியாளர் குமரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.