Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 100 நாள் வேலை உடனடியாக வழங்க மாவட்ட கலெக்டருக்கு பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் கோரிக்கை.

0

திருச்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு பணிகள் இல்லாமல் வாடும் ஏழை எளிய மக்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கோரிக்கை.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இது 100 நாள் வேலைத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை, வயலூர்,சிறுகமணி, பெருகமணி,
நவல்பட்டு,
அந்தநல்லூர், கொடியாலம் போன்ற பகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் ஊதியத்தை நம்பி வாழ்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் குடிசைகளில் வாழ்பவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் தற்போது சொத்து வரி, குடிநீர் வரி கட்டியவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்படும் என தெரிவித்து இவர்களுக்கு பணி வழங்க மறுக்கப்பட்டு வருகிறது.

110 ரூபாய் வரி கட்டிய குடிசை வீட்டிற்கு தற்போது 350 ரூபாயாக வரி உயர்த்தி விதிக்கப்பட்டுள்ளது.மேலும் எட்டு ஆண்டுகளாக வரி கட்டாத அவர்களுக்கு 350 ரூபாய் வீதம் எட்டு ஆண்டுகளுக்கு வரி கட்ட வேண்டும் என கூறி உள்ளனர்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் வருமானத்தை வைத்து இவர்களால் எப்படி இவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியும்.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் தொடங்கப்பட்ட இந்த 100 நாள் வேலைத் திட்டத்தை திருச்சியில் தற்போது அடையாள அட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல நூற்றுக்கணக்கான ஏழை எளிய பொதுமக்கள் இதனால் வாழ்வாதாரம் இழந்து பெரும் துயரத்தில் உள்ளனர் .

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் எதுவும் தவித்து வந்த ஏழை மக்களுக்கு தற்போது இந்த 100 நாள் வேலைவாய்ப்பு பணியும் வழங்காமல் இருப்பது வேதனைக்குரியது.

எனவே திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக இதில் தலையிட்டு வரி கட்ட முடியாத ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்து இவர்களுக்கு மீண்டும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட தலைவர் ராஜசேகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.