பொன்னியின் செல்வன் வரலாற்று நாடகத்தை தடைசெய்ய கோரி திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா போலீஸ் கமிஷனரிடம் மனு.
பொன்னியின் செல்வன் நாடகத்தில்
முதல்-அமைச்சரின் பெயருக்கு களங்கம்
போலீஸ் கமிஷனரிடம் சிவா எம்.பி. மகன் புகார்.
திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா சிவா திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது;-
முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி எழுதிய பல புத்தகங்களை நான் படித்துள்ளேன். அந்த வகையில் அவர் எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று கதையையும் படித்ததோடு மட்டுமல்லாமல் அந்த வரலாற்று கதையை வேறு ஆசிரியர் கல்கி எழுதி உள்ளதையும் படித்து உள்ளேன்.
இந்தநிலையில் திருச்சி தேவர் ஹாலில் இரு தினங்களுக்கு முன்பு கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாடகம் நடக்க உள்ளதாக அறிந்து அந்த வரலாற்று நாடகத்தை பார்க்க சென்றேன் . அப்போது அந்த நாடகத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் வேடத்தில் நடித்த நபர் அவரது உரையாடலின்போது வரலாற்றுக் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் தற்போதைய முதல்வர் எதைப் பேசினாலும் தவறாக பேசுகிறார்,எதை எழுதினாலும் தவறாக எழுதுகிறார் என்ற உரையாடலை பேசி சிரித்தார்.இந்த உரையாடலின் போது அரங்கில் மக்களிடையே நிசப்தம் நிலவியது.
தமிழக முதல்வர் என்று பாராமல் அவரை அசிங்கமாக பேசி முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் இருப்பதாக அறிகிறேன். இந்த உரையாடலைக் கேட்ட நானும் மற்ற நபர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம்.
இந்த நாடகத்தை மீண்டும் சென்னை ,கோவை, ஈரோடு ,மதுரை ஆகிய ஊர்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். எனவே என் புகாரை ஏற்று பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாடகம் நடத்துவதாக கூறி உரையாடலில் தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த நாடகத்தில் உரிமையாளர் ரமேஷ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் சூர்யா சிவா கூறுகையில் ஆணையரிடம் பொன்னியின் செல்வன் நாடகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு உள்ளேன் என கூறினார்.