திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு
நியாய விலை கடை பணியாளர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம்.
பொது விநியோகத் திட்டத்திற்கு பணித்துறை உருவாக்கப்படவேண்டும்.அரசு பணியாளர்களுக்கு வழங்க கூடிய 31 சதவீத அகவிலைப்படியை நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற நியாயவிலைக் கடை பணியாளர் களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். புதிய விற்பனை முனையம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கருப்புச்சட்டை அணிந்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் விசுவநாதன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவரும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவருமான பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
மாநில நிர்வாகிகள் சிவக்குமார், பிச்சைமுத்து, சரவணன், திருச்சி டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகி முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாநில பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
இந்த போராட்டத்தில் கருப்புச்சட்டை அணிந்து ஆயிரக்கணக்கான துறை பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.