அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் 29ந்தேதி கல்லணை சாலையில் உள்ள பொன்னி டெல்டா பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் கண்டுபிடிக்காத நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றபட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சென்ன குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறை இயக்குனர் ஷாகில் அக்தர் மேற்பார்வையில் எஸ்பி.ஜெயக்குமார், துணை டி.எஸ்.பி. மதன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமஜெயம் கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் அவர் வீட்டிலிருந்து நடைபயணமாக வந்த இடம், அவரை விடியற்காலையில் நடைபயிற்சியின் போது பார்த்த நபர்களிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் எஸ்.பி. ஜெயக்குமார் ராமஜெயம் கொலை சம்பந்தமான விசாரணையில் குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் காவல்துறை அதிகாரிகளை நேரிலோ அல்லது 9080616241,
9498120467,
7094012599
என்ற செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் சரியான தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்.
தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று எஸ் பி ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது இந்த கொலை வழக்கு நடந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகளை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் என்னுடைய மேற்பார்வையில் 3 டிஎஸ்பிக்கள் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள்,45 போலீசார் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த உள்ளோம். ஒவ்வொரு குழுவும் ஒரு வித கோணத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.பொதுவாக இந்த கொலை கொடூரமாக நடந்து உள்ளது.இதனை யாரும் மறுக்க முடியாது.இதனைவிட சிக்கலான கொலை வழக்கில் கண்டுபிடித்து உள்ளோம்.
எனவே இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் ஒத்துழைப்பு தாருங்கள். தங்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவல்களையும் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.
ராமஜெயம் கொலை வழக்கை பொறுத்தவரை வெளிப்படையாக விசாரணை நடத்த இருக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று எஸ் பி, ஜெயக்குமார் கூறியுள்ளார்.