Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு 100% வெற்றி உறுதி திருச்சியில் ஓபிஎஸ் பேச்சு.

0

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு 100% வெற்றி உறுதி.திருச்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேச்சு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 -ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னணி தலைவர்கள் , முன்னாள் அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று கரூரில் பிரச்சாரம் செய்தார். இரவு அங்கு தங்கிய திருச்சி புறப்பட்டு வந்தார்.

திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திருச்சி மன்னார்புரத்தில் உள்ள வி.எஸ்.முகமது இப்ராகிம் மண்டபத்திற்கு வந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சியில் இன்று நடந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான காமராஜ், ஓ.எஸ். மணியன் ,மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், குமார் ,பரஞ்ஜோதி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது:-

*பொய்யான வாக்குறுதிகள்*

தமிழகத்தில் அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் அதிக முறை ஆட்சி புரிந்தது கிடையாது. ஏனென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்கள். ஜெயலலிதா கண்ட கனவுகளையும், திட்டங்களையும், அதன்பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார்.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சி நடந்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம்.

2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3-வது முறை ஆட்சி புரியும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுபற்றி கேட்டால் நாங்கள் எப்படியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு ரத்து தான் எனது முதல் கையெழுத்து என்று கூறினார். அது நடந்ததா? இல்லை.
தமிழகத்தில் நடக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க. வீறு கொண்டு எழுந்து, 10 மாதமாக தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை படுதோல்வி அடைய செய்யும்.

10 ஆண்டுகாலம் சிறந்த முதலமைச்சராக பணியாற்றியவர் எம்.ஜி.ஆர் – அவருக்கு பின்னர் 16 ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக அம்மா ( ஜெயலலிதா) பொறுப்பேற்று தொலைநோக்குத் திட்டங்களை கொடுத்தார்.

அவருக்கு பின்னர் 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக பணியாற்றினார். ஆக மொத்த 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய வரலாறு அ.தி.மு.க.வுக்கு தான் உண்டு.

இந்த இயக்கத்திற்கு தி.மு.க.வினர் எண்ணற்ற பிரச்சினைகளை கொடுத்தாலும், அதனை பொறுமையாக ஜெயலலிதா எதிர் கொண்டார்.

மூன்றாவது முறையும் அ.தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. ஒரு சின்ன சறுக்காலால் அது நிறைவேறாமல் போனது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால்
இந்தியாவிலேயே தமிழகத்தில் படித்த பட்டதாரிகள்
52 மாக அதிகரிக்க வழிவகை செய்தார்.

2007-ல் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி (காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வந்தது ) அப்போது அது நடக்கவில்லை. ஆனால் உச்சநீதிமன்றம் சென்று 2010-ல் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு அரசு ஆணை பெற்று தந்தவர் ஜெயலலிதா.

பேரிடர் காலங்களில் உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கியது அ.தி.மு.க. ஆட்சி தான்.

நம் ஆட்சியில் பாரத பிரதமரே கூறினார். கொரோனோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

இப்போ யார் செத்தால் என்ன ? யார் இருந்தால் என்ன ? என்கிற நிலை உள்ளது.இது தான் தி.மு.க. ஆட்சி.

கொடுக்கிறவர்கள் அ.தி.க.மு.வினர்.
எடுக்கின்றபவர்கள் தி.மு.க.வினர்.சட்டமன்ற தேர்தலின்போது 505 பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க.வினர் வழங்கினர். ஏதாவது உருப்படியாக செய்தார்களா?. இவர்களது ஆட்சி காட்சியாக தான் உள்ளது.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார் ஸ்டாலின். ஆனால் அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை,அவரால் செய்யவும் முடியாது.

நேரடியாக நகர்புற தேர்தலை நடத்த இவர்களுக்கு அச்சம் ?. ஏனென்றால் மக்கள் வெளியே எங்கு சென்றாலும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
பொங்கல் தொகுப்பாக தமிழக மக்களுக்கு 2,500 ரூபாய் எல்லோருக்கும் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க .ஆனால் ஸ்டாலின் சொன்னார்.

இது பத்தாது ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றார்.
ஆனால் தி.மு.க. 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இவர்களது முகமூடியை முழுவதுமாக கிழிப்பதற்கு நல்வாய்ப்பாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.

தி.மு.க.வினருக்கு நல்ல பாடம் சொல்லும் ஒரு தேர்தலாக இந்த தேர்தல் உள்ளது. எங்களை பொறுத்த வரை எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனைகள் மற்றும் ஜெயலலிதாவின் சாதனைகள் எல்லாம் தாண்டி தொண்டர்களை முன் நிறுத்தி தான் வாக்குகளை கேட்போம்.

இந்தியாவில் எத்தனையோ அரசியல் கட்சிகள் உள்ளது. ஆனால் தொண்டர்களால் கட்டிக் காக்கப்படும் கட்சி என்றால் அது அ.தி.மு.க. தான்.

இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழக சட்ட மன்றத்திற்கும் உறுதியாக தேர்தல் வரும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்று கூறினார்கள். அதுவும் செய்யவில்லை. இதனால் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி நமது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.