ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக இந்தியா சார்பில் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்களும், ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து சார்பில் தலா ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணியில் தேர்வு பெற்றுள்ளார். அஸ்வின் கடந்த வருடம் மட்டும் 9 டெஸ்டில் 54 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.இதேபோல மற்றொரு சுழற்பந்து வீரரான அக்ஷர் படேலும், இடம் பிடித்துள்ளார். அவர் கடந்த வருடம் 5 டெஸ்டில் 27 விக்கெட் எடுத்துள்ளார்.
ஒயிட் பால் போட்டிக்கு (ஒருநாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த ஆண்டு 11 டெஸ்டில் 906 ரன் (21 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்.
விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் சிட்னி டெஸ்டில் 89 ரன்னும், பிரிஸ்பேனில் 97 ரன்னும், சென்னை டெஸ்டில் 91 ரன்னும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள இந்த டெஸ்ட் கனவு அணிக்கு இலங்கையை சேர்ந்த கருணா ரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டின் டெஸ்ட் போட்டி அடிப்படையில் தேர்வு செய்துள்ள 11 வீரர்கள் வருமாறு:-
ரோகித் சர்மா, கருணா ரத்னே (கேப்டன், இலங்கை) லபுசேன் (ஆஸ்திரேலியா), ஜோரூட் (இங்கிலாந்து), பவாத் ஆலம் (பாகிஸ்தான்) ரிஷப்பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜேமிசன் (நியூசிலாந்து), அக்ஷர் படேல், ஹசன் அலி (பாகிஸ்தான்), சகின்ஷா அப்ரிடி (பாகிஸ்தான்).