Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ள நீர்.

0

அரியாற்றில் வெள்ளப்பெருக்கு:
திருச்சி- திண்டுக்கல் சாலையில் மீண்டும் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்.

வாகன ஓட்டிகள் கடும் அவதி.

மணப்பாறை பகுதியில் கொடித்தீர்த்த மழையால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் மணப்பாறை பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் கோரையாறு மற்றும் அரியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்தது. அதனால், திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி, ராஜீவ்காந்தி நகர், தீரன் நகர், உறையூர், வயலூர் ரோடு, லிங்கா நகர், செல்வநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் படிப்படியாக வடிந்து தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர்.

இந்தநிலையில் மணப்பாறை பகுதியில் நேற்று முன் தினம் மிதமான மழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை மணப்பாறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

அப்பகுதியில் உள்ள பொய்கை குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏரி, குளத்து தண்ணீர் மற்றும் காட்டாற்று தண்ணீர் வெள்ளெமன பெருக்கெடுத்து அரியாற்றில் கரைபுரண்டு ஓடத்தொடங்கியது.

சில இடங்களில் கரைகளில் உடைப்பெடுத்து அவரை, நெல் சாகுபடி செய்த வயல் வெளிகளில் ஓடத்தொடங்கியது.

மணப்பாறை அதிகாரப்பட்டியில் சுமார் 200 ஏக்கர் வயல்வெளியில் வெள்ளநீர் புகுந்து சநெல்பயிர்களை மூழ்கடித்தது. மேலும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. பல வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். மணப்பாறை பஸ் நிலையத்தை மழை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மேலும் அங்குள்ள அப்பையர் குளம் நிரம்பி ராஜீவ்நகர் குடியிருப்புகளை சூழ்ந்தது.

அதனை கலெக்டர் சிவராசு, ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிந்துஜா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை அதிக மழைப்பொழிவாக, அதாவது 274 .6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் உள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை பெய்த கனமழையின் காரணமாக அதிகப்படியான வெள்ள நீர் அரியாற்றில் வந்ததன் எதிரொலி – புங்கனூர் அருகே அரியாற்றில் நேற்று மாலை உடைப்பு ஏற்பட்டதால் கருமண்டபம் … திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகிறது.

குறிப்பாக கருமண்டபத்தில் உள்ள திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பிராட்டியூர் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்று கொண்டுள்ளது –
இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.