தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி. வலுவான நிலையில் இந்திய அணி.ஒரே நாளில் 18 விக்கெட்கள் வீழ்ச்சி.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் தொடங்கியது.
இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும் (248 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 40 ரன்களுடனும் (81 பந்து, 8 பவுண்டரி) களத்தில் இருந்தனர். 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்துவீச்சில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முடிவில் இந்திய அணி 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.கே.எல்.ராகுல் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸ்சை தொடங்கியது. ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே கேப்டன் டீன் என்கர் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மார்க்ரம் (13ரன்கள்), கீகன் பீட்டர்சன் (15 ரன்கள்), வான் டர் டுசன் (3 ரன்கள்) அடுத்தடுத்து வெளியேறினர். சிறிதுநேரம் போராடிய குயிண்டன் டி காக் 34 ரன்னில் வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்க அணியில் தெம்பா பவுமா மட்டும் 52 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் முகம்மது ஷமி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸ்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து வலுவான முன்னிலையில் (146 ரன்கள்) உள்ளது.
3வது நாளான இன்று மட்டும் 18 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது.