திருச்செந்தூரில் 2வது வருடமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற சூரசம்ஹாரம்.
திருச்செந்தூரில் 2வது வருடமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற சூரசம்ஹாரம்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் திருச்செந்தூர் கடற்கரையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக பக்தர்களின்றி சூரசம்ஹார விழா நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த வியாழக்கிழமை (நவ. 4) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழாவின் 6 ஆம் நாளான இன்று, கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி, அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன.
மாலை 4.30 மணிக்கு திருக்கோயில் கடற்கரை முகப்பில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. கடவுள் முருகன் தனது வேல் கொண்டு அசுரனான சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முதலில் யானைமுகம், சிங்கமுகம், தன்முகத்துடன் வந்த சூரனை அழித்த கடவுள் முருகன், இறுதியாக மாமர வடிவில் வந்த சூரபத்மனை வேல் கொண்டு இரு கூறாக பிளந்து சூரனுடன் அவனின் ஆணவத்தையும் சேர்த்து அழித்தார்.
விழாவின் முதல் 5 நாள்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சூரசம்ஹார நிகழ்வில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தொடர்ந்து நாளை(நவ. 10) நடைபெறும் தெய்வானை அம்பாள் தவசுக்காட்சி, திருக்கல்யாண தோள் மாலை மாற்றும் வைபவம் மற்றும் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தொலைக்காட்சி, வலைத்தளங்கள் வாயிலாக பக்தர்கள் இந்நிகழ்வை காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.