Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக உணவு தினம்.

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக உணவு தினம்.

0

'- Advertisement -

இன்று
உலக உணவு தினம்.

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

உலக உணவு தினம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் பேசுகையில்,

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்
– பாரதி.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானத் தேவை; ‘உணவு’. பசி என்ற இயற்கை உணர்வுக்கு இயற்கையே உணவுப் பொருட்களையும் கொடுக்கிறது. ஆனால் அந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்வதில் தொடங்கி அவை ஒருவரது வயிற்றுக்குள் செல்வது வரையிலான பிரச்சனைகள் நீண்டவை,நெடியவை ஆகும்.

உலகின் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம்மைப் போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பவை மக்கள் தொகை பெருக்கமும், விளைநிலங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு போன்றவை காரணங்கள் ஆகும். இவை மூன்றுமே நம்மைப் போன்ற பல நாட்டு மக்களின் உணவுத் தேவையையும், பசியையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. தங்கள் அதீத வசதியால் ஆடம்பர நட்சத்திர உணவகங்களில் அடிக்கடி உணவு சாப்பிட்டு டிப்ஸ் கொடுக்கும் வர்க்கத்தினரும் நம் நாட்டில் இருக்கின்றனர். அதே வேளையில் ஒருநாளைக்கு ஒருவேளை உணவாவது கிடைக்காதா எனத் தவிப்போரும், கோவில் வாசலிலும் கடைத்தெருக்களிலும் யாசகம் கேட்பவர்களும் இன்றளவும் இருக்கிறார்கள். உலகம் முழுக்க அன்றாடம் பலர் பட்டினிச்சாவால் மரணிக்கிறார்கள். இயற்கை, இலவசமாகக் கொடுக்கும் உணவுப் பொருட்கள் ஒரு ஏழையின் பசியைப் போக்குவதற்குள் உயிர்வலியும் மரண வலிகளும் கண்முன் காட்டிச்சென்று விடுகின்றன. விஷயம் அவ்வளவு தீவிரமானதுதான். ஆனால் இப்போது அல்ல. காலம் காலமாக.
1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் நாள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் விதமாகவும், அனைத்து உயிர்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும், பசியால் யாரும் வாடக்கூடாது; உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் சென்றடைய வேண்டும் போன்ற காரணங்களுக்காக 1979-ம் ஆண்டு ஐநா சபையின் 20-வது பொது மாநாட்டில் அக்டோபர் 16-ம் நாள் உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது.
42 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை. உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவை அனைத்தும் சரிவிகித அளவில் இல்லாமல் இருப்பதே உணவு சார்ந்த பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றது.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்* எனப் பாடினார் பாரதி. ஆனால் இந்தியாவில் தினமும் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். 18 கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தினமும் ஆயிரக்கணக்கானோர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாகவும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அனைவருக்கும் தேவையான உணவு கிடைக்கவும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு சரியாக செய்வதில்லை. அதோடு வசதி படைத்த பெரும் பணக்காரர்களினால் உயர்த்தப்படும் விலைவாசி உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் நடுத்தர, ஏழை மக்கள் மட்டுமே கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன் வறுமையில் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக பலர் உணவு சாப்பிட வியர்வை சிந்திய விவசாயி தனக்கு சாப்பிட உணவில்லை என எலி கறியை சாப்பிட்ட கொடுமையெல்லாம் நம் நாட்டில் நடந்ததை நாம் அறிந்திருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் மண்ணால் சுடப்பட்ட ரொட்டிகளை சாப்பிட்டு குழந்தைகள் உள்பட பலர் உயிர் இழக்கின்றனர். இப்படி பல நாடுகளில் பல உணவுப் போராட்டங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. விளைச்சல் குறைவு, தண்ணீர் பற்றாக்குறை, விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி பொருட்களுக்கு போதிய விலை இல்லாதது என உணவு உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே எண்ணற்ற பிரச்னைகள். இதன் ஒருகட்டமாக விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் போடப்பட்டு காங்கிரீட் கட்டடங்களாக மாற்றப்படுகின்றன. இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது போன்ற வேதனையான நிகழ்வுகள் நம்மை சர்வ சாதாரணாமாகவே கடந்து செல்கின்றன.
மறுபுறமோ இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள். திருமண மண்டபங்களில் சராசரியாக 10 – 100 நபர்கள் உண்ணும் அளவிலான உணவுப்பொருள் வீண் செய்யப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் அன்றாடம் பல டன் உணவுப் பொருள் தெரிந்தோ தெரியாமலேயே வீண் செய்கிறோம். இவை அனைத்திற்குமே உணவுப் பொருள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணமாக இருக்கின்றது. இப்படி வீண் செய்யும் உணவுப் பொருட்களால் பசியால் வாடும் மக்களின் உணவுத் தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும். ஆனால் நம்மிடம் உபரியாக இருக்கும் உணவுப் பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கும் எண்ணம் நம்மில் எத்தனைப் பேருக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் அனுதினமும் உழைக்க இயலாதவர்களுக்கும், முதியவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் தினமும் 25 நபர் முதல் 50 நபர்கள் வரை இயன்றவரை அன்னதானம் செய்து வருகிறோம் உபரியாக வரும் உணவினை சேகரித்து வழங்கி வருகிறோம் என்றார். மேலும்
இந்திய அரசு 1982 ஆம் ஆண்டு அலுமினிய உலோகத்தில் 2.20 கிராம் எடையில் 26mm விட்டத்தில் அறுகோண வடிவில் 20 பைசா மதிப்பில் கல்கத்தா ஹைதராபாத் அக்க சாலையில் உலக உணவு தின நினைவார்த்த நாணயத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளது என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.