அன்னவாசல் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி மாநில திட்ட இயக்குனர் அவர்களின் உத்தரவின்படியும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின்படியும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து அன்னவாசல் பகுதியில் கணக்கெடுக்குப் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெ.ரெகுநாததுரை கூறியதாவது:
பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் மாவட்ட கல்வி
அலுவலர்கள்,வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள்,தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் ,அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கிராம ஊராட்சி செயலர்கள் அனைவரும்
இக் கணக்கெடுப்பு பணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இப்பணியானது குறிப்பாக தொழிற்சாலை,ரயில்நிலையம்,பேருந்து நிலையம்,கட்டடப்பணி நடைபெறும் இடங்கள்,சந்தைப் பகுதிகளில் நடைபெறும்.
இக்கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளிசெல்லா குழந்தைகள்,மாற்றுத் திறனாளி குழந்தைகள் அனைவரும் உடனடியாக குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் .

இவர்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கற்றல் திறன் அடிப்படையில் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றார்.
அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை பஞ்சாயத்தில் நூறுநாள் வேலையில் ஈடுபட்ட மரிங்கிபட்டி,உருவம்பட்டி,விசலூர்,குடுமியான்மலை , அண்ணாநகர் பகுதி பெண்களிடம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெ.ரெகுநாததுரை , அன்னவாசல் வட்டார வளமைய பயிற்றுநர்கள் பி.ரமேஷ்,தி.பழனியப்பன்,உருவம்பட்டி ஆசிரியர் கு.முனியசாமி, குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சௌந்தர பாண்டி ஆகியோர் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் இராப்பூசல் பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.மணிமாறன், அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ்,வட்டார வளமைய பயிற்றுநர்கள் வனஜா,கண்ணன்,சரண்யா மற்றும் சிறப்பாசியர்கள் அருள்மேரி,ரூபா ஆகியோர் ஈடுபட்டனர்.







