சிலம்பத்தில் தொடர்ந்து சாதித்து வரும் சுகிதாவை நேரில் சென்று வாழ்த்திய எம்.எல்.ஏ.விரைவில் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி.
சிலம்பத்தில் பல்வேறு சாதனை படைத்த சுகித்தாவின் இல்லத்திற்கு நேரடியாக சென்று எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வாழ்த்து : முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி.
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்ட கலையில் தேர்ச்சி பெற்று, பங்கேற்கும் அத்தனை போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை மலையென குவிக்கும், திருச்சி சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த இரா.மோகன் – மோ.பிரகதா. இவர்களின் மகள் மோ.பி.சுகித்தா. தனது 12 வயதில் கோவா சர்வதேச போட்டியில் முதல் பரிசாக தங்கம் வென்றதில் தொடங்கி, சிங்கப்பூர் சர்வதேச போட்டியில் முதல் பரிசு தங்கம், மற்றும் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன், டெல்லியில் நடந்த தேசிய போட்டியில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளியென 25க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை குவித்தும்,
பெரியவர் நல்லகண்ணு அவர்களின் முன்னிலையில் திருச்சியில் உலக சாதனை படைத்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பாராட்டையும் பெற்று, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னோடி பெண்மணி விருதும், இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் வழங்கிய இளம் கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடும் (பிஸ்டல் பிரிவு) போட்டியிலும் கலந்து கொண்டு முதல் பரிசு தங்கம் வென்று தனது திறமையை மேலும் விரிவு படுத்தியுள்ளார்.
தனது பன்னிரண்டாம் வயதிலேயே சிலம்பக்கலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வகை பாடங்களை கற்று, ஆறு வயது சிறுவர் முதல் அனைவருக்கும் இலவசமாகவே சிலம்பம் கற்று தரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது வியப்புக்குரியதும், பாராட்டுக்குரியதுமாகும்.
இளம் வீராங்கனை சுகிதாவின் கோரிக்கையான சிலம்பக் கலையை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டுமென மாண்புமிகு சுற்றுச்சூழல் – விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்களிடம் விடுத்த கோரிக்கையையேற்று
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 15 நாட்களுக்குள் சிலம்பக் கலையை தேசிய விளையாட்டிற்கு பரிந்துரை செய்துள்ளார் என்பது இவருக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும்.
இப்படி மிகப்பெரும் சாதனை புரிந்த சுகித்தாவின் இல்லத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் நேரடியாக சென்று இவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் விரைவில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, விரைவில் திருச்சியில் தொடங்கப்பட இருக்கும் ரைபிள் கிளப்பில் கௌரவ உறுப்பினராக பரிந்துரை மற்றும் சிலம்ப பயிற்சிக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் களம் அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
இவரால் நமது திருச்சிக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை என சுகித்தாவின் பெற்றோர்களிடம் கூறி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் டோல்கேட் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.