Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் லாரி உரிமையாளர்கள் மனு அளித்ததின் எதிரொலி : ஆற்றில் மண் வளத்தை சுரண்டும் மணல் மாபியாக்களுக்கு அனுமதி அளிப்பாரா தமிழக முதல்வர்?

0

'- Advertisement -

இயற்கை வளம் பொருந்திய நாடு இந்தியா. ஆனால், இன்றோ அதன் சூழ்நிலை மாறி இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன.

வரும் காலங்களில் தண்ணீர் என்பது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
இந்தியா முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய பிரச்னை “மணல் மாபியா’ என்று சொல்லப்படும் மணல் கொள்ளை.

குறிப்பாக, ஆற்று மணல். ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் இந்தியா முழுவதும் சட்டத்துக்குப் புறம்பாக ஆற்று மணல் சுரண்டப்படுகிறது.
ஆற்று மணலை எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு என்ன பிரச்னை? ஆற்று மணலைச் சுரண்டுவதால் ஆறுகளின் சூழ்நிலை மண்டலம் (River Eco System) பாதிப்படைகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு கியூபிக் மீட்டர் (Cubic Metre) மணலை எடுத்தால் மூன்று கியூபிக் மீட்டர் தண்ணீரை இழக்க நேரிடும்.
+மணலில் காணப்படும் நுண்ணுயிரிகள் மண்ணுக்குச் செழிப்புத் தன்மையை கொடுக்கின்றன.

அத்தகைய நுண்ணுயிரிகள் (Micro Organism) ஆற்று மணல் அதிகமாக அள்ளப்படுவதால் அழிந்துவிடும். குறிப்பாக, இரண்டு நுண்ணுயிரிகளைச் சொல்லலாம்.

ஒன்று பைட்டோ பிளாங்டான் (Phyto Plankton), மற்றொன்று ஜு பிளாங்டான் (Zoo Plankton). இந்த இரண்டு நுண்ணுயிரிகளும் மணல் சூழ்நிலை மண்டலத்தில் உள்ள அழுகிய, மட்கிய பொருள்களை உள்கொள்ளுவதால் அந்தச் சூழ்நிலை மண்டலம் சுத்தம் செய்யப்படுகிறது.
மேலும், தண்ணீரின் அளவை நிலைப்படுத்துகிறது. தண்ணீரின் அமிலம், காரத் தன்மையை மாறவிடாமல் இந்த நுண்ணுயிரிகள் நிலைப்படுத்துகின்றன. இதனால் நன்னீராக நமக்குத் குடிதண்ணீர் கிடைக்க உதவுகிறது.
முன்பெல்லாம் நாம் ஆற்று ஓரங்களில் கையை வைத்துத் தோண்டினாலே தண்ணீர் வரும். ஆனால், இன்று 100 அடிக்கு மேல் தோண்டினாலும் தண்ணீர் வருவது இல்லை. ஏனென்றால், நாம் ஆற்று மணலை அதிகமாகச் சுரண்டி விட்டதால் நிலத்தடி நீரை சேமிக்க முடியாமல் போகிறது. மேலும், ஆறுகளில் நீர்வரத்து குறைந்து, அதன் சூழ்நிலை மண்டலம் இன்று பாலைவனமாக மாறி வருகிறது. இதனால், அங்கு வாழும் தாவரம், விலங்கினங்களும் அழிந்து வருகின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டின் காவிரி ஆறு இன்று மாசடைந்து அதன் பொலிவை இழந்து வருகிறது. காவிரியை ஒட்டியுள்ள கிராமங்களில் இன்று குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர் குறைந்து வருவதோடு விவசாயமும் பாதிப்படைந்து வருகிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் காவிரி ஆற்றினைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது, ஏனென்றால், மழைநீரை சேமிக்க போதுமான அளவு மணல் கொஞ்சம் கொஞ்சமாக காவிரி ஆற்றில் குறைந்து வருகிறது.

காவிரி ஆற்றுப் படுகையில் இன்று வெப்பம் அதிகரித்து வருகிறது. நாமே நம் விளைநிலங்களை அழித்து வருகிறோம்.


பூச்சிக் கொல்லி, வேதியியல் உரங்களை இட்டதனால் மண்ணின் தன்மையே மாறிவிட்டது. காவிரி ஆற்றின் அருகேயுள்ள விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக உருமாறி வியாபார நிலங்களாக ஆகி வருகின்றன.

திருச்சிக்கு அருகேயுள்ள குளித்தலை, அதனைச் சுற்றியுள்ள காவிரி ஆற்றில் ஆற்று மணல் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீரைச் சேமிப்பதில் ஆற்று மணல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும், நீரைச் சேமிப்பதோடு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து மணல் நம்மைப் பாதுகாக்கிறது. இப்பொழுது காவிரி ஆறு சூழ்நிலை மண்டலம் ஆபத்தில் உள்ளது. ஆற்று மணலை அதிக அளவில் சுரண்டுவதால் பல்லுயிர்களின் எண்ணிக்கை ஆற்றுச் சூழல் மண்டலத்தில் குறைந்து வருகிறது. “காவிரி டெல்டா பகுதி’ என்று இப்போது அழைக்கப்படும் பகுதி “மருத நிலம்’ என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், இந்தப் பகுதியில் “மருத மரம்’ அதிக அளவில் இருந்தது. இப்பொழுது இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இது அழிந்து வரும் தாவர இனத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முப்பதாண்டுகளுக்கு முன்னர் செழிப்பான காடுகளைப் போல இருந்த காவிரிப் படுகை இப்பொழுது இல்லை. காவிரி ஆறு இன்று மாசடைந்து வருவதோடு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இதனால், இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 23 வகையான மீன் இனங்கள் இருந்தன. ஆனால், தற்பொழுது 5 வகையான மீன் இனங்கள் இருப்பது அரிதாக உள்ளது. மேலும் Fresh Water Prawn என்று சொல்லப்படுகிற நன்னீர் இறால் மீன்களும் குறைந்து விட்டன. கொசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன.

காவிரி ஆறு இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது “தட்சிண கங்கா’ என்று அழைக்கப்படுகிறது.
ஓர் ஆறு உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால் அதற்கு மிக முக்கியமாக மூன்று காரணிகள் தேவைப்படுகின்றன.
1. இயற்பியல் காரணிகள் Physical Factors (தட்பவெப்பநிலை).
2. வேதியியல் காரணிகள் Chemical Factors (கரையும் தாதுப் பொருள்கள்).
3. உயிர்க் காரணிகள் Biological Factors (தாவர மற்றும் விலங்குகள்).
வெற்றி இவற்றை பாதுகாக்க ஆற்றின் மண் வளத்தை காக்க வேண்டும்.

தமிழகத்தில் மணலின் தேவை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி யூனிட் மணல் தமிழகத்துக்குத் தேவைப்படுகிறது.

வானளாவிய கட்டிடங்கள் கட்டுமானங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சென்னையில் மட்டும் தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 7ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரையிலான மணல் லோடுகள் தேவைப்படுகின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறன.

தமிழகத்தில் தேவை அதிகரிக்க அதிகரிக்க அள்ளப்படும் மணல் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னொரு புறம் கர்நாடகா, கேரளாவில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்ட பிறகு தமிழகத்திலிருந்து மணல் கொள்ளை கன ஜோராக நடைபெற்று வருகிறது.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகளின் இயற்கை வளமும் தொடர்ந்து அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. இதைத் தடுப்பதற்காகக் கூறப்படும் யோசனைதான் எம்-சாண்ட் (Manufactured Sand) எனப்படும் மாற்று மணல்.

செயற்கையாக இந்த மணலை உருவாக்கி பயன்படுத்தினால் ஆறுகளின் மணல் உபயோகம் குறையும். இதன் காரணமாக காவிரி, பாலாறு, தாமிரபரணி போன்ற தமிழக ஆறுகள் தப்பிக்கும் என்பது அரசின் யோசனை. மேலும் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் முன்னெடுக்கப்படும் கட்டுமான திட்டங்கள் மற்றும் வீடு கட்டித் தரும் திட்டங்களாலும் மணலின் தேவை முன்பைவிட இன்னும் அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களில் மணல் பற்றாக்குறை அதிகரிக்கும் அளவுக்கு மணல் தேவையும் அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் துறை தள்ளாடி வருவதாகக் கூறப்பட்டாலும் தமிழகத்தில் கட்டுமானத்துறையின் வேகம் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு ஆண்டும் கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது; தேவையும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் மாற்று மணல் அவசியத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

எம்-சாண்ட் எனப்படும் மாற்று மணல் எப்படி உருவாக்கப்படுகிறது? கருங்கற்களை உடைத்து இயந்திரங்கள் மூலம் அது பொடியாக்கி செயற்கையாக உருவாக்கப்படும் மணல்தான் எம்-சாண்ட். ஏற்கெனவே தமிழகத்தில் அரசு கட்டுமானங்களில் மாற்று மணல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் வீடு கட்டுவோரும், பில்டர்களும் மாற்று மணலை பயன்படுத்தி வரவே செய்கிறார்கள். இந்த மணல் தகுந்த அளவுகளில் தரமாகத் தயாரிக்கப்படுவதால், கட்டப்படும் கட்டிடங்களில் பிரச்சினை இல்லை என்றே பில்டர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், பூச்சு வேலைகளுக்கு மாற்று மணல் ஏற்றதாக இல்லை என்ற மாற்று கருத்தும் இல்லாமல் இல்லை. ஆனால், அதற்கும் மாற்று மணலில் தீர்வு இருக்கவே செய்கிறது. ஜல்லி தயாரிக்கும்போது கிடைக்கும் கிரஷர் தூசுகளைப் பூச்சுக்குப் பயன்படுத்த முடியும். ஆந்திரா, கர்நாடகா மற்றும் சில வட மாநிலங்களில் கிரஷர் தூசுகளைப் பூச்சுக்குப் பயன்படுத்தும் வழக்கம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. பூச்சுக்கு ஏற்றதாக இந்தத் தூசை சொல்கிறார்கள் இத்தொழிலில் உள்ளவர்கள். இதை கட்டுமானத் தொழிலில் நீண்ட நாட்களாக உள்ள தொழிலாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், மாற்று மணல் தொடர்ந்து கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ரியல் எஸ்டேட் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்துமாற்று மணல் சீராகக் கிடைக்கும்பட்சத்தில் வீடு கட்டுவோருக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்று நம்பலாம். தற்போதைய சூழலில் மாற்று மணலைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது.

செயற்கையாக இந்த மணலை உருவாக்கி பயன்படுத்தினால் ஆறுகளின் மணல் உபயோகம் குறையும். இதன் காரணமாக காவிரி, பாலாறு, தாமிரபரணி போன்ற தமிழக ஆறுகள் தப்பிக்கும் என்பது அரசின் யோசனை.

இன்று திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லாரி அதிபர்கள் சங்கத் தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில் லாரி அதிபர்கள் ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க வற்புறுத்தி சுப்ரமணியபுரம் பொதுப்பணித்துறை செயலாளரிடம் மனு அளித்தனர்.

இதனை கேள்விப்பட்ட சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் நிரந்தரமாக மணல் குவாரிகளை மூட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தை ஏமாற்றி மாதம்தோறும் பல நூறு கோடி கொள்ளை அடிக்கும் மணல் கொள்ளை மாபியா கும்பலுக்கு நல்லாட்சி தந்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிப்பாரா ?

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.