காருகுடி அரசு உயர் நிலைப் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் சார்பில் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடமும், ஊர் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
கொரோனா பெருந் தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. கொரோனாவின் தாக்கம் முற்றிலும் குறையாத நிலையே இன்னும் நீடிப்பதால் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்னும் பள்ளியில் சேர்க்காமலேயே உள்ளனர்.அரசு வழங்கும் விலையில்லா பாடநூல், குறிப்பேடு, புத்தகப்பை, காலணி,சீருடை, நிலவரைபடம், கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி, மடிக்கணினி, முட்டையுடன் கூடிய சத்தான மதிய உணவு, கல்வி உதவித்தொகை, போன்றவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்படி வலியுறுத்தினர்.
மேலும் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இருக்கக்கூடிய காற்றோட்டமான வகுப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், தனித்திறன்களை வளர்க்க ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சி, திறனறி தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்குதல், தற்காப்புக் கலை, பேச்சு ,கட்டுரை, ஓவியம், வினாடி வினா என அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறும் வண்ணம் மாணவர்களைத் தயார் செய்தல் போன்றவற்றுடன் ஒழுக்கம், கட்டுப்பாடு, சமூகப் பணிகளில் ஈடுபடுதல் என்று குழந்தைகளுக்கான நன்நெறிகளை போதித்து அவர்களை மிகச்சிறந்த குடிமக்களாக மாற்றுவதற்கு பள்ளி எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கூறினர்.
தலைமை ஆசிரியர் கீதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும் மாணவிகளும் பங்கேற்று பள்ளியின் சிறப்பினை எடுத்துக் கூறினார்.