சென்னை- – பாரிஸ் நகரம் இடையே இயக்கப்படும் விமானத்திற்கு, சென்னை விமான நிலைய, ‘ரன்வே’யில், சிவாச்சாரியார் வாயிலாக விக்னேஸ்வர பூஜை விமரிசையாக நடத்தப்பட்டது.பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் – சென்னை இடையேயான நேரடி விமான சேவையை, ‘ஏர் பிரான்ஸ்’ நிறுவனம்26ம் தேதி துவக்கியது.
இதன்படி, பாரிஸ் நகரிலிருந்து 26ம் தேதி காலை 111 பயணியர், 19 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், அன்று இரவு 12.25 மணிக்கு சென்னை வந்தடைந்தது.இந்தியா மற்றும் பிரான்ஸ் தேசிய கொடிகளுடன் வந்து தரையிறங்கிய விமானத்தை, சென்னை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
முதன்முறையாக சென்னை வந்தடைந்த பிரான்ஸ் விமானத்திலிருந்து, பயணியரை இறக்கி விட்டதும், ரன்வேயிலேயே விக்னேஸ்வரர் பூஜை நடத்தப்பட்டது. சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலை சேர்ந்த, விமல் சிவாச்சாரியார் பூஜையை நடத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது:நாங்கள், வாழும் கலை என்ற ‘வாட்ஸ்- ஆப்’ குழுவில் உள்ளோம். அதன் வாயிலாக, பல்வேறு இடங்களுக்கு சென்று பூஜைகள் நடத்துவது வழக்கம்.
குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரான ‘ஏர்போர்ட் அத்தாரிட்டி’யை சேர்ந்த முதன்மை பொறியாளர், எங்களை தொடர்பு கொண்டு, விமானம் ஒன்றுக்கு பூஜை போட வேண்டும் என்று கேட்டார்.நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். அதற்கான அனுமதியை அவரே பெற்றுக் கொடுத்தார். விமானம் வந்த அன்று இரவு, வழக்கமான சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர். ஆனால், கற்பூரம், ஊதுவர்த்தி, சாம்பிராணி மற்றும் எரிபொருள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. விமானம் தரையிறங்கி, பயணியர் வெளியேறியதும், விமானம் நின்று கொண்டிருந்த ரன்வே பகுதிக்கு சென்றேன்.
எந்த ஒரு செயலையும் துவங்கும் முன், விநாயகரை வணங்குவது நமது மரபு. அதன்படி, அங்கு விமானம் முகப்பில், புஷ்பங்களால் 15 நிமிடங்கள் விக்னேஸ்வர பூஜை நடத்தினேன். விமான பைலட்கள், பணியாளர்கள், விக்னேஸ்வரர் பூஜையில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மறுநாள், சென்னையில் இருந்து பாரிஸ் நகருக்கு விமானம் புறப்படும் முன், பயணியர் ‘போடிங் பாஸ்’ பெற்று உள்ளே நுழையும் முன், மீண்டும் நுழைவாயில் பகுதியில் விக்னேஸ்வரர் பூஜை போட்டேன், இவ்வாறு அவர் கூறினார்.