திருச்சி கிழக்கு தொகுதி 33வது வார்டு சுப்பிரமணியபுரம், இரஞ்சிதபுரம், வள்ளுவர் தெருவில் கடந்த 15 நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தொடர்பு கொள்ள முயன்று அவரின் உதவியாளர் முகுந்தனிடம் இந்த சாக்கடை படங்களை எடுத்து அனுப்பி புகார் அளித்தார் வள்ளுவர் தெருவில் உள்ள நபர் ஒருவர்.
எம்எல்ஏ விடம் கூறி விட்டேன் உடனடியாக நாளை நடவடிக்கை எடுப்பார்கள் எனக்கூறி உள்ளார் .அடுத்த நாள் அந்த நபரை தொடர்பு கொண்டு பணிகள் தொடங்கி விட்டதா இல்லை என்றால் எம்எல்ஏவின் மற்றொரு உதவியாளர் கெவின் என்பவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் உதவியாளர் முகுந்தன். கேவின் என்பவரிடமும் பொதுமக்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு குறைகளை கூறி உள்ளனர் ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்களில்தான் ஓடிவருகிறது.
இந்த வள்ளுவர் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும் முதியவர்களும் வசித்து வருகின்றனர்.
இந்த கழிவுநீர் மூலம் ஏற்படும் தொற்றுநோய்களால் யாருக்காவது நோய் ஏற்பட்டு உயிர் இழப்பு நேரிட்ட பின்புதான் இந்த தொகுதி எம்எல்ஏ இனிக்கோவும் மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா என இப்பகுதி பொதுமக்கள் வருத்தத்துடன் கேள்வி கேட்கின்றனர்.
இதே வள்ளுவர் தெருவில் மட்டும் பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சதுர கற்களாலான சாலை தற்போது மேடு பள்ளமாக உள்ளதால் தினமும் பல சிறுவர்களும், முதியவர்களும் கீழே விழுந்து எழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.
இதுகுறித்து கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இதுகுறித்து கூறியபோது தேர்தல் நெருங்கி விட்டது வெற்றி பெற்றவுடன் முதல் வேலையாக உங்கள் தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தருகிறேன் என கூறினார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை வெற்றிபெற்றவரோ இந்தத் தகவலை அறிந்து தான் இந்த தெருவை புறக்கணிக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது .
இனிகோ இருதயராஜ் தனது தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் பிரச்சனைக்காக என்னை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் ( ஆனால் தற்போது பொதுமக்கள் இவரை எப்போதும் தொடர்பு கொள்ள முடியாது) சுகாதாரம், குடிநீர்,தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தருவேன் எனவும் வாக்குறுதி அளித்தார், ஆனால் இவற்றையெல்லாம் தற்போது காற்றில் விட்டு விட்டாரா ?
இந்த சிறிய சாக்கடை பிரச்சனையை ஒரு போன் மூலம் தீர்த்து வைக்கக்கூடிய எம்எல்ஏ இதையே கண்டுகொள்ளவில்லை என்றால் கிழக்கு தொகுதி மக்களின் பிரச்சினையை எப்படி தீர்த்து வைப்பார் ?