அதிமுகவில் வி.கே.சசிகலாவையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
”ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தகர்ந்துவிடும், தமிழ்நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர்கள் கட்சியின் இருபெரும் தலைவர்கள்.
திமுகவின் சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து, மக்களின் ஆதரவுடன் 66 எம்எல்ஏக்களைப் பெற்று சட்டப்பேரவையில் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த வி.கே.சசிகலா,
கட்சித் தொண்டர்களின் பெரும்பான்மை மற்றும் மக்களிடம் அதிமுகவுக்கு உள்ள செல்வாக்கு ஆகியவற்றைப் பார்த்து,
தனக்கும், தனது குடும்பத்துக்கும் அரசியலில் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் தேடிக்கொள்ளும் நோக்கில், கட்சியை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாகத் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும்,
அதை ஊரறியப் பரப்புவதும் என்று விநோதமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். இதைக் கண்டிக்கிறோம்.
நம் உழைப்பைச் சுரண்டும் வகையில் வி.கே.சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவை வசப்படுத்திக் கொள்ளவும், அபகரித்துக் கொள்ளவும் வஞ்சக வலையை விரித்துக் கொண்டிருக்கின்றனர்.
சசிகலாவையோ, அவரது குடும்பத்தினரையோ ஒருபோதும் அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் அனுமதிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டோம்.
வி.கே.சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ மற்றும் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கும், லட்சியங்களுக்கும் மாறாகச் செயல்படுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் வலியுறுத்துகிறோம்”.
என் ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.