திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகரில் வேலை இல்லாமல் வருமானம் இழந்து தவிக்கும் 10,000 ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆர்டிஓ அலுவலகம் மூலம் உணவுப் பொருட்கள் ரூ7,500 நிவாரணம் வழங்க வேண்டும்.
அரசு அனுமதித்துள்ள ரயில் பயணிகள், அரசு அலுவலர்கள், மருத்துவமனை ஊழியர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல, திரும்பி வர உரிய ஆதாரங்களுடன் ஓடும் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும். அனைத்து காவல் நிலையத்தில் சிறை பிடித்த ஆட்டோகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். தனியார் வங்கிகள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ்ல் பெற்ற கடனை செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, மாவட்ட பொது செயலாளர் மணிகண்டன்,
புறநகர் மாவட்ட செயலாளர் சம்பத். சிஐடியு மைய நிர்வாகிகள் ரெங்கராஜன், ஜெயபால், துப்புரவு சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் பேசினர். இதில் ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், வெற்றிவேல், கிரேசி, ரேணுகா, மாணிக்கம், சரவணன் ,அப்துல் கரீம், சார்லஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆட்டோ சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சிவாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
: தமிழக அரசு ஊரடங்கு தளர்வு செய்தபோது ஆட்டோக்களில் 2 பயணிகள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.
ஆனால் ஆட்டோக்களில் பயணம் செய்ய இ பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
இது நடைமுறை சாத்தியமற்றது. இதனை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு ஆட்டோக்களுக்கான இ பதிவு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
நல வாரியங்களில் பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமின்றி ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ரூ 7500 நிவாரணம் வழங்க வேண்டும். எப்.சி, இன்சூரன்ஸ், இஎம்ஐ செலுத்த ஓராண்டுகாலம் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றார்.
பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.