Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

0

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“தமிழகத்தில், மாநில திட்டக் குழு, கலைஞர் அவர்களால், 1971 ஆம் ஆண்டு மே திங்கள் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதல்வர் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.

மாநில திட்டக் குழு துணைத் தலைவர் அவர்களின்கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020-ல் “மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக” மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது,

கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர். இராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து (இ.ஆ.ப, (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா (மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்), மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.