Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சாரிய வடிவாக அவதரித்ததே ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம்.

0

கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக அவதரித்ததே ஸ்ரீதத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்கள். இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம்.

மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.

கற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர்.

கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள்.

இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.

எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர்.

அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே… நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்’’ என்றனர். அதைக் கேட்டு, அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.

கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘‘நான், என் கணவருக்குச் செய்யும் பணிவிடை சத்தியம் எனில், இந்த் துறவிகள் குழந்தைகளாகட்டும்’’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா.

நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர்,

அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர்.

அவர்களிடம், உங்கள் கணவன் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி.

உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே… உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர்.

இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்திரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்!

தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது.

கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர் பக்தர்கள்!

இவரை முறையாக உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும். மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை!

Leave A Reply

Your email address will not be published.