Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தலைவர்களுக்கெல்லாம் தலைவர் கலைஞர் தான். சமூக வலைதளங்களில் பரவும் ஸ்டாலினின் வீடியோ.

0

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவரும், முத்தமிழ் அறிஞரும், மாபெரும் சிந்தனையாளருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவலால் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனால் வீட்டிலேயே எளிமையான முறையில் கருணாநிதி பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இன்றைய தினம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதற்கிடையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

அங்கு சென்று மரியாதை செலுத்த முடியாமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

இருப்பினும் கருணாநிதி வழியில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்திருக்கிறது. இதுவே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை என்று தங்களை தேற்றி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் தலைநிமிர்ந்து வருகிறேன்!

#KalaignarForever என்ற பெயரில் பதிவொன்றை இட்டுள்ளார். இதனுடன் கருணாநிதியின் புகைப்படங்களால் தொகுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

அதன் பின்னணியில் முதல்வர் ஸ்டாலினின் குரல் கம்பீரத்துடன் ஒலிக்க ஆரம்பிக்கிறது.
அதாவது, திருவாரூரில் கருவாகி தமிழகத்தையே தனது ஊராக ஆக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர்.

முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே! இன்று நீங்கள் பிறந்த ஜூன் 3. இது உங்களின் பிறந்த நாள் மட்டுமல்ல. உயிரினும் மேலான உங்களின் உடன்பிறப்புகள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள். அதனால் தான் கழகத்தின் கண்மணிகளாம் கருப்பு, சிவப்பு தொண்டர்கள் அனைவருக்கும் தனித்தனி பிறந்த நாட்கள் இல்லை. எங்கள் ஆருயிர் தலைவரே! இந்த ஜூன் 3 நான் கம்பீரமாய் வருகிறேன்.

உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்.

ஈரோட்டில் அன்றொரு நாள் நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை உடன்பிறப்புகளின் துணையோடு நிறைவேற்றி காட்டிவிட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வருகிறேன். தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டன் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன்.

நீங்கள் மறையவில்லை. மறைந்திருந்து என்னை கவனிப்பதாகத் தான் எப்போதும் நினைத்தேன். இப்போதும் என்னை கவனித்துக் கொண்டு தான் இருப்பீர்கள். கோட்டையில் கொடியேற்றி நாள் முதலே கொரோனாவை விரட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று என்னை நீங்கள் உருவகப்படுத்தினீர்கள்.
அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டிருக்கிறேன். அன்றொரு நாள் விழுப்புரத்தில் சொன்னீர்கள். யாரிடமிருந்து பாராட்டு வரவில்லையோ, அவர்களும் பாராட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

தேர்தலில் நமக்கு வாக்களிக்காத பலரது பாராட்டுகளையும் கழகத்திற்கு வாங்கி தர பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

உங்களது வளர்ப்பான நான் இந்த ஜூன் 3 உங்களை வெற்றி செய்தியுடன் சந்திக்க வருகிறேன். வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே! என்று கூறி உருக்கமாக முடித்துள்ளார்.

இந்த பதிவு திமுகவினர் மட்டுமல்ல, தமிழர்கள் பலரும் வைரலாக்கி கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.