திருச்சி உறையூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி உறையூர் வள்ளுவர் தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் சோனியாகாந்தி தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு போலீசாரைக் கண்டதும் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவர்கள் தப்பியோட ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த புருசோத்தமன் ( 41), சேகர் (55), ஹரி என்ற அருணாசலம் (34), நவாப் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜவகர் (47), பால்ராஜ் (40). லிங்க நகரைச் சேர்ந்த பாஸ்கர் (48), செல்வராஜ் (43), சிவகுமார் (49), திலகர் (49), முருகன் (52) சந்திரசேகர் (49) ஆகிய 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.1,400 மற்றும் 3 சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.