மின்னணு சாதனங்களை இணைய வழியில்
விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்
செல்லிடப்பேசி விற்பனையாளர்கள் கோரிக்கை.
இனைய வழியில் செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இணைய வழியில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என செல்லிடப்பேசி விற்பனையாளர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து, அகில இந்திய செல்லிடப்பேசி சில்லரை வியாபாரிகள் சங்க தமிழக தலைவர் எஸ் . விஸ்வநாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடிருப்பது :
நாடு முழுவதும்சுமார்1.50 லட்சமும், தமிழகத்தில் 15,000 பேரும் செல்லிடப்பேசி விற்பனையாளர்கள் சங்கத்தில் உள்ளோம். மேலும் எங்களைச் சார்ந்து சுமார் 3 லட்சம் பேர் தொழில் செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே கோவிட் 19 தாக்கத்தால் எங்களது தொழில் முற்றிலும் சிதைந்து விட்ட நிலையில் தற்போது 2 ஆவது அலை தாக்குதலில் மேலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இணையவழி விற்பனை மூலம் முற்றிலும் தொழில் முடங்கிய நிலையில் உள்ளோம்.
எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, இணைய வழி விற்பனை சேவைகளை மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மற்ற வேளையில் செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனையை இணைய வழியில் (ஆன்லைனில்) மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி விற்பனையாளர்களுக்கு நல வாரியம் அமைத்து எங்களை காக்க
வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.