முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திலேயே, கோவை மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள மின் மயானத்தில் சடலங்களை எரிக்க இடம் இல்லாமல் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.
அதிகமான வாகனங்களை வைத்து கிருமிநாசினி மருந்துகள் அடிக்க வேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகள் அதிகம் வருகின்றன. இதைத் தடுக்க முறையான கணிப்புகள் நடத்த வேண்டும்.
கூடுதலாக கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும். இச்சூழலில் மக்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். அதை ஆளும் அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மாவட்டத்தில் அ.தி.மு.க.வினரை பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய அனுமதி அளிப்பதில்லை. நாங்கள் அனுமதி கேட்கும் இடத்தில் இருக்கிறோம்.
பொதுமக்களுக்கு முககவசம் வழங்க சென்றால், அ.தி.மு.க.வினர் மீது வழக்குப் பதிந்து விடுவோம் என போலீசார் எச்சரிக்கை விடுக்கின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.