கேரளாவில் புயல் மழை. வெள்ளம், நிலச்சரிவு, குடியிருப்புகளில் பாறைகள் சரிவு. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க நடவடிக்கை.
கேரளாவில் கடந்த சில நாட்களாக டவ்தே மற்றும் யாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையுடன் பயங்கர சூறைக்காற்றும் வீசி வருகிறது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இது அதி தீவிர புயலாக விஸ்வரூபம் எடுத்தது.
இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு இடையேயான பாரதீப் பகுதியில் நாளை ( 26ந் தேதி)கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக டவ்தே மற்றும் யாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையுடன் பயங்கர சூறைக்காற்றும் வீசி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள கல்லமலா வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. 13 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகளின் அருகே பாறைகள் சரிந்து விழுந்தன. ஆனால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் பொதுமக்களிடம் மேலும் நிலச்சரிவு ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.