இ-பதிவு தளத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கம்: இனி திருமண நிகழ்ச்சிகளுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாது.
தமிழகத்தில் இ-பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், இ-பதிவு இணையதளப் பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளதால் இனி திருமண நிகழ்ச்சிகளில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து வரும் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப் பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் பயணம் செய்ய, இ-பதிவு கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இறப்பு, திருமணத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனால், திருமணத்திற்காக இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.