Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பொதுமக்கள் எளிதாக காய்கறி வாங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

0

திருச்சியில் கூட்ட நெரிசலை தவிர்த்து மக்கள் எளிதாக காய்கறி வாங்க, காய்கறி சில்லறை விற்பனை கடைகள் முன்பு போல் 8 இடங்களில் அமைக்கப்படுமா?

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருச்சி காந்தி மார்க்கெட் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரம் மேலப்புலிவார்டு சாலையில் இரவு நேரத்திலும், காலை நேரத்தில் அதே பகுதியில் காய்கறிகள் சில்லறை விற்பனைக் கடைகளும் இயங்கும் என திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவே அந்த சாலையில் சாலையின் இரு புறமும் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சாக்குகள், பிளக்ஸ் பேனர் மற்றும் பழைய துணிகளை போட்டு இடம் பிடித்து உள்ளனர்.

ஒரே இடத்தில் காய்கறி சில்லறை விற்பனை கடைகள் அமைக்கப்பட்டால் மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஏனென்றால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவலின் போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை, கீழப்புலிவார்டு சாலை மதுரை மைதானம், அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன் பகுதி உள்பட 8 இடங்களில் தற்காலிக காய்கறி சில்லறை விற்பனை கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பொதுமக்களும் தங்கள் வீட்டின் அருகில் உள்ள தற்காலிக கடைகளுக்கு சென்று காய்கறிகளை எளிதாக வாங்கி சென்றனர். போலீஸ் கெடுபிடிகளில் இருந்தும் அவர்கள் இதனால் தப்ப முடிந்தது.

எனவே தற்போது மேலப்புலிவார்டு சாலையில் ஒரே இடத்தில் மட்டும் காய்கறி சில்லறை விற்பனை கடைகள் செயல்படுவதற்கு பதிலாக மீண்டும் பழைய நடைமுறைப்படி 8 இடங்களில் காய்கறி சில்லறை விற்பனை கடைகளை அனுமதிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.